டொரோண்டோ வரலாற்றில் அரங்கேறிய அதிகமான படுகொலைகள்

ரொரன்ரோவில் இந்த ஆண்டு துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை மக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை உண்டாக்கியுள்ளது.


ஸ்காபரோவில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன், ரொரன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 90ஐ எட்டியுள்ளது.

இதற்கு முன்னர் 1991ஆம் ஆண்டிலேயே ரொரன்ரோவில் அதிகளவானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவுகள் இருந்த நிலையில், தற்போது அந்த பதிவுகளையும் விஞ்சி இந்த ஆண்டின் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை சென்றுள்ளது.

அதனால் ரொரன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் இடம்பெற்ற மோசமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் இவ்வாறான நிலைமை குறித்து கருத்து வெளியிட்டுள்ள ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி, ரொரன்ரோவில் இவ்வாறான வன்முறைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது தொடர்பில் மத்திய மாநில அரசுகளுடன் பேசி செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை, தான் உட்பட எவர் ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த ஆண்டில், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இந்த நிலையினை மாற்றியமைப்பதற்கு தாம் உறுதி பூண்டுள்ளதாகவும், மக்களின் உதவியுடன் ரொரன்ரோவை பாதுகாப்பான நகரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.