ஐ.நா. அமைதிப்படையில் கனடா நீடிக்காது!

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பின்னர் ஐ.நா. அமைதிகாக்கும் படையணியில் கனடா நீடிக்காதென கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.


ஹலிஃபெக்ஸ் தேசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் ஹர்ஜித் சஜான், சீ.பீ.சி. வானொலிக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய விசேட செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகயில் தொடர்ந்து ஈடுபட கனடாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஒருவருட காலத்தில் பூரண ஒத்துழைப்பை வழங்கியதாகவும் ஏனைய நாடுகளும் இந்த பொறுப்பை வகிக்குமாறும் கோரியுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து மாலியில் அமைதிகாக்கும் நடவடிக்கையில் கனேடிய துருப்புக்கள் இணைந்துள்ளன. மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகளுக்காக மேற்கு ஆபிரிக்க பிராந்தியத்தில் 250 கனேடிய துருப்புக்கள் தற்போது பணியில் உள்ளனர். அத்தோடு, 8 ஹெலிகொப்டர்களும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 1994ஆம் ஆண்டிற்;குப் பின்னர் ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் கனேடிய துருப்புக்கள் இணைந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 2021ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இணைந்துகொள்ள ஒட்டாவா எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.