சகோதரி விபச்சாரி, நிவாரணத்துக்கு பணம் தேவை – புலம்பெயர் பரிதாபங்கள்

தமிழரின் 30 ஆண்டு கால ஆயுத போராட்டம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் போராட்ட காலத்தில், கதாநாயகர் அந்தஸ்தில் இருந்த விடுதலை போராளிகள் இன்று முன்னாள் போராளிகள் என்ற அடைமானத்துடன் சமூகத்தில் தங்களை இணைத்து கொள்வதற்கு தாம் யாருக்காக போராடினார்களோ அவர்களுடனே போராட்டம் நடாத்தவேண்டிய ஒரு இக்கட்டான நிலையில் இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் உறவுகளை, அவயவங்களை இழந்த மக்கள் இன்றும் ஒரு சமூக வாழ்வில் ஒரு விடிவு பெறாத மக்களாகவே இருக்கின்றார்கள்.


30 வருடம் மிகப்பெரிய ஆயுத போராட்டத்துக்கு முண்டுகொடுத்து நின்ற தாயக மக்களும், புலம் பெயர்ந்த மக்களும் 2009 ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபின்பு, பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை ஒருசில ஆண்டுகளிலேயே தீர்த்திருக்க முடியும்.

உலகெங்கும் பரந்து வாழும் புலம் பெயர் மக்கள், அமைப்புகள் யாவுமே பல ஆயிரம் கோடி ரூபா இலங்கை இராணுவ அரச இயந்திரத்தை எதிர்த்த ஒரு பெரும் ஆயுதப்போராட்டத்துக்கு சகலவழிகளிலும் 24 மணிநேரமும் உழைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, யுத்த முடிவுக்கு பின் பாதிக்கப்பட்ட மக்கள், போராளிகளின் தேவைகளை ஒரு சில ஆண்டுகளிலேயே தீர்த்திருக்க முடியும் என்பதில் எந்த இரகசியமும் இல்லை..

2009 மே 19இல் முடிந்ததாக, அல்லது வெற்றிகொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டது வன்னியில் இருந்த தமிழீழவிடுதலை போராட்டத்தின் இராணுவ கட்டமைப்பே அன்றி, அதன் வலை பின்னலுக்கு எந்த ஒரு சிறு சேதமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்த வலை பின்னலே ஆயுத தளபாடங்கள் முதல் மக்களின் தேவைகள் வரை போரட்டகாலத்தில் நிறைவுசெய்திருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை.

அப்படியாயின் எப்படி இந்த மக்கள் கைவிடப்பட்டன. இவர்களின் குறை இன்றுவரை எப்படி தொடர்கின்றது?

யுத்தமுடிவுக்கு பின் வன்னிக்கு, நாட்டுக்கு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கட்டுமானத்துக்கு என மேடை போட்டு சேர்த்த உதவிகள் எல்லாம் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் நீங்கள் வன்னியை ஒரு சிங்கப்பூராகத்தான் இன்று பார்த்திருக்க முடியும். ஆனால் அப்படி ஏதும் நடைபெறவில்லை என்பது ஏமாற்றம் மட்டுமல்ல, துரோகமும் கூட.

2009 வரை ஊரில், ஏன் உலகில் பரந்து வாழும் தமிழர்களிடம் கூட வன்னி தலைமையின் நேர்மை, நியாயம், கட்டுக்கோப்பு மீது இருந்த ஒரு நம்பிக்கையின் அடிப்படையில், எதுவாகினும் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற அதீத நம்பிக்கையிலேயே எந்த கேள்வியும் கேட்காமல் கேட்கும் உதவிகள் எல்லாம் செய்தார்கள். வன்னி சொன்னது, நாடு சொன்னது என்ற ஒரு மந்திர வார்த்தைக்கு எதிர்கேள்வி இன்றி, வன்னியில் யார் என்றோ, எந்த நாடு என்றோ ஒரு கேள்வியும் கேளாமல் ஆயிரம் ஆயிரமாக அள்ளி கொடுத்தார்கள். மக்கள் எந்த எதிர் கேள்வியும் கேட்கவில்லை, ஏனெனில் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் எனும் நம்பிக்கை.

2009 க்கு பின்னர் எமது புலம்பெயர் நாட்டில் இருந்த பல அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டினாலும், அதிகப்படியாக சுயநலமே மண்டிக்கிடந்தது.

போராட்டத்தின் பின் வன்னியில் இருந்து புலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புகளே ஒரு வெளிப்படைத்தன்மை இன்றி, இன்னும் 2009 க்கும் முன் இருந்த மனநிலையுடனேயே செயல்படுவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.  2009 க்கு பின்னர் மக்களிடம் நம்பிக்கை படிப்படியாக குறைந்து கேள்வியும் கேட்கமுடியாமல் விரக்தியின் விளிம்பில் வந்து நிற்கின்றார்கள்.

போருக்குப் பின்னான தாயக மக்களின் வாழ்வை சொல்லி, அவர்களின் துயரங்களை சொல்லி புலம்பெயர் அமைப்புகள் ஒரு வெளிப்படைத்தன்மை இன்றி நடந்து கொள்ளும் விதங்களை பார்க்கும் போது, இவர்களுக்காகவா இத்தனை ஆயிரம் இளைய இனிய உயிர்களை விடுதலை நெருப்பில் ஆகுதியாக்கினோம் என்ற வெறுப்பே மிஞ்சுகின்றது.

போருக்கு பின் ஏதோதோ காரணங்கள் எல்லாம் சொல்லி பணம் சேர்த்தார்கள். இதில் சிலரோ அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் செய்திகளை வைத்து ஒரு படி மேலே சென்று முன்னாள் போராளிகளின் மனைவிகள் விபச்சாரம் செய்கின்றார்கள் என்று எமது சொந்த சகோதரிகளையே விபச்சாரிகளாக்கியும் பிரச்சாரம் செய்து பணம் சேர்த்தார்கள்.

கனடாவில் ஒரு அமைப்பு 2016 ஆண்டு நாட்டில் ஒரு மாட்டு பண்ணை அமைக்க “மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென ஒரு நிதிசேர் நடை மூலம் சேகரிக்கப்பட்ட பணம் கடந்த மாதம் (2018 October) வரை அங்கு அனுப்பப்படவில்லை எனும் தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் அமைப்பு குறித்த அதிருப்தியை உருவாக்கியது.

மக்களின் அவசர வாழ்வாதாரம் என சொல்லப்பட்டது முன்னாள் போராளிகளின் அவலங்களும் உள்ளடக்கம்.

இந்த செய்தியை தொடர்ந்து அந்த அமைப்பு சிலதினங்களில் ஒரு ஊடக அறிக்கையை மின்னஞ்சலில் அனுப்பியது.  அதாவது “ஆமாம் அவசர வாழ்வாதாரத்துக்கென சேர்த்த பணம் தம்மிடமே 2 வருடங்களாக வங்கியில் பத்திரமாக கனடாவில் உள்ளதாகவும், சில நடைமுறை சிக்கல்கலால் அனுப்பப்படவில்லை என்றும் அந்த அறிக்கை அமைந்திருந்தது.  அதனுடன் அந்த செய்தி அடங்கிப்போனது.

இப்படி எமது சகோதரிகளை விபசாரிகளாக்கி விளம்பரம் பண்ணி சேகரிக்கப்படுகின்ற பணம் என்ன காரணத்துக்காகவும் இங்கு தங்கி நிற்பது நியாயப்படுத்தமுடியாதது.  இதுவரை இதற்க்கு பதில் இல்லை.

மேலும் இங்கு நடக்கும் பல நிகழ்ச்சிகளின் விளம்பரங்களில் விழாவின் ஒரு பகுதி நாட்டுக்கு, வன்னிக்கு என வருவது ஒரு சாதாரண விடயமாக போயுள்ளது.

யாருமே கேள்வி கேட்பதுமில்லை, தமது கடமையை நிறைவேற்றிவிட்டோம் என அப்பாவி மக்கள் கூட்டம் இருக்கும் வரை இப்படியான தான்தோன்றித்தனமான வியாபாரங்கள் அரங்கேற்றிக்கொண்டே இருக்கும்.

வந்தவன் போனவன் எல்லாம் எமது வலியில் வியாபாரம் செய்கின்றார்கள்.

அண்மையில் பல இலட்சம் டாலர் செலவில் நடந்த இந்திய இசையமைப்பாளரின் நிகழ்வில் கூட, நிகழ்வின் ஒரு பகுதி பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கு என முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்டது.  இதில் சிலர் ஒரு பகுதி என்றால் எவ்வளவு என்று கேள்வி கேட்க தயங்கவில்லை.

முதலில் $25,000 டாலர் என்றார்கள், பின்பு இலாபத்தில் 10% என்றார்கள். நிகழ்வின் பட்ஜெட் $300,000 டாலருக்கு மேல். ஆனால் இதுவரை 10 டாலரும் அனுப்பப்பட்டதாக எந்த செய்தியும் இல்லை.  இந்த செய்தி அந்த இசை அமைப்பாளரை சென்றடையும் காலம் வெகுதொலைவில் இல்லை. இசையமைப்பாளர் ஈழத்தமிழரை ஏமாற்றினார் என்ற பழியே அவரை ஈழத்தமிழர்களிடம் இருந்து ஒதுக்கும்.  நிகழ்வு வைத்தவர்கள் செய்தியை தந்தால் அதை பதிவேற்ற ஊடகங்கள் தயாராக உள்ளன..

இப்படி பட்ட நிகழ்வுகள் கடந்த 10 ஆண்டுகளாக அரங்கேறுகின்றது. சில செல்கின்றது, பல பாதிவழியில் மாயமாகின்றது.

தலைவனை இழந்த தமிழ் இனம், வந்தவன், போனவன் எல்லாம் தலையில் மிளகாய் அரைக்கின்றார்கள்.

இது போன்ற போக்கிலித்தனங்களுக்கு என்ன தீர்வு.  இந்த பூனைக்கு மணி கட்டுவது யார்.  அல்லது எது நடந்தால் எனக்கென்ன? எல்லாம் விதிதானென வாழாதிருக்கப்போகின்றோமா? இல்லை. ஊமையுலகின் உறக்கம் கலைத்து நீதி கேட்போமா?

இதில் சிந்தித்து செயல்பட வேண்டியது மக்களே.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லனவாக நடக்க நாம் அனைவரும் முயல்வோம்.

  • இனிமேல் யாராவது ஈழத்தையோ, பாதிக்கப்பட்ட மக்களையோ, வன்னிக்கோ அல்லது இங்கு பொது நிகழ்வுக்கோ என்று நிகழ்வு நடத்தினால், அல்லது விளம்பரப்படுத்தினால், முழு கணக்கறிக்கையும் குறுக்கியகாலத்தில் மக்கள் மத்தியில் சமர்ப்பிக்கவேண்டும் என்ற நிலையை உருவாக்குவோம்.
  • இலட்சக்கணக்கில் உங்கள் ஆடம்பரங்களை காட்டி நிகழ்வுகளை செய்துவிட்டு, இறுதியில் பிச்சை போடுவது போல் 100, 200 தான் மிஞ்சியது என்று ஒரு நிலையில் செய்வதானால், தயவு செய்து அந்த தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
  • நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவோர், இப்படியான உதவி செய்கிறோம் என்று வருபவர்களுக்கு கணக்கறிக்கை வெளியிடுவீர்களா என கேட்டு உதவி செய்யுங்கள்.
  • பொது நோக்கில் பணம் சேர்க்கின்றோம் என்று அறிவித்து ஒரு நிகழ்வு நடத்துமிடத்து அதில் $10 கொடுத்து நிகழ்வு பார்ப்பவருக்கும் முழுக்கணக்கும் கேட்கும் உரிமை இருக்கு என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த செய்தி தாய்நாட்டுக்கான உதவிகள் என்று மட்டும் நின்றுவிடாமல், இங்குள்ள நிதிசேர் நிகழ்வுகளிலேயும் இந்நடைமுறையையே பின்பற்றுங்கள் (திறந்த கணக்கு).

தாயக நிகழ்வுக்கு , கோவில் நிகழ்வுக்கு, நிதி சேர்ப்புக்கு என்று இந்தியாவில் இருந்து பாடகர்களை, கலைஞர்களை அழைப்பார்கள். பின்பு Limo பிடித்து நயாகரா, CN டவர், கிளப் என்று சுற்றுவார்கள். அப்புறம் எங்கே பணம் சேர்த்து நீங்கள் எங்கே கோவில் கட்டுவது? தாயகத்துக்கு உதவி செய்வது  எல்லாம் ஊர் காசில் உல்லாசம் தான்.

உதவி செய்பவர்களும், யாருக்கு எங்கே உதவி செய்கின்றோம் என்பதில் தெளிவாக இருக்கவும். நாட்டில் இருந்து உதவி கேட்பவர்களும், ஒரே தேவைக்கு பல நாடுகளில் இருந்து தமது தொடர்புகளுக்கூடாக உதவிகளை பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் மறுப்பதற்கு இல்லை. பாத்திரம் அறிந்து பிச்சை போடவும்.

இனிவரும் காலங்களில் திறந்த கணக்கறிக்கை தரமறுப்பவர்களுக்கான உதவிகளை நிறுத்துவோம். திறந்த கணக்கறிக்கைகளை தெரியப்படுத்துபவர்களுக்கு துணையாய் நிற்போம்.

நிகழ்ச்சி முடிவில் ஒரு மாதிரி காசோலையை காட்டி படம்போட்டு, பின்பு அந்த தொகையை கொடுக்காதவர்கள் இனிமேல் இருக்கமாட்டார்கள் என நம்புவோம்.

TorontoTamil.com & Media Team.


அவசர வாழ்வாதாரத்துக்கென சேர்த்த பணம் கனடாவிலேயே பத்திரமாக உள்ளது – கனடிய தமிழர் பேரவையின் அறிக்கை

கனடிய தமிழ் காங்கிரஸ் 2016 இல் மக்களின் அவசர வாழ்வாதாரத்துக்கென நிதிசேர் நடையில் சேர்த்த பணம் மாயம்.