கஷோகி விவகாரம்: துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்

சவுதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோகிக்கு என்ன நடந்தது என்பது பற்றிய துருக்கியின் ஒலிப் பதிவுகளை தமது நாட்டின் உளவுத்துறைப் பணியாளர்கள் செவிமடுத்ததாக, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.

பரிஸில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டிருந்த பிரதமர், அங்கு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணம் தொடர்பில் கனேடிய உளவுத்துறை அமைப்புகள், துருக்கி உளவுத்துறையுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகின்றது.

இவ்விடயத்தில் துருக்கியின் பங்கு என்ன என்பது தொடர்பாக கனடா முழுமையாக புரிந்துக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

எனினும், துருக்கியின் ஒலிப் பதிவுகளில் பதிவாகியிருந்த விடயங்கள் தொடர்பிலோ அல்லது அவை தூதரகத்தின் உள்ளே பதிவு செய்யப்பட்டவையா என்பது தொடர்பான தகவல்களை வெளியிட பிரதமர் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.