டொரோண்டோவில் நடன ஆசிரியர்களால் ஏமாற்றப்பட்ட 1150 தமிழ் சிறுமிகள் – Updated

கடந்த வாரம் ஊடகங்கள் வாயிலாக முன்வைக்கப்பட்ட (கீழே உள்ள செய்தி) பரதமைல் தொடர்பான பல கேள்விகள் ஊடக உலகிலும், பொதுமக்கள் மத்தியிலும் பல அதிர்வலைகளையும், மிகப்பிரமாண்டமான எதிர்வினையையும் ஆற்றியுள்ளது.

மிகவும் மேலான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நடத்திமுடிக்கப்பட்ட பரதமைல் நிகழ்வு, இப்படியான மக்கள் மத்தியில் உள்ள சில எதிர்மறையான விமர்சனங்களை எமது ஊடகங்களினுடாக கொண்டுவரப்பட்டு குறித்த நிகழ்வு நிகழ்த்தியோரை சென்றடைந்தனுடாக பல கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது.

எமது செய்தியை தொடர்ந்து நிகழ்வு ஏற்பாட்டாளர்களும், நடன ஆசிரியர்களும் எம்மை தொடர்புகொண்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களையே அளித்துள்ளார்கள்.

இப்படியான ஒரு மிகப்பெரும் நிகழ்வை நடத்தும் போது ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களையே இந்த நிகழ்வும் சந்தித்துள்ளது என்பதையே அவர்களின் பதிலில் இருந்து அறியக்கூடியதாகவிருந்தது.

எவ்வளவு ஆதரவு நிகழ்வுக்கு இருந்தபோதும், நிகழ்வு வெற்றியுடன் முடிவடைந்தபின், யாவரும் இதில் இருந்து தமது இயல்புநிலைக்கு சென்றுவிட, நிகழ்வின் நோக்கத்தையும், அதன் கணக்கு முதலிய சகல நடவடிக்கைகளையும் முடிக்கவேண்டிய பொறுப்பு ஒரு சில நபர்களிலேயே சுமத்தப்பட்டு விடுகின்றது.

எமது செய்தியில் எங்குமே நிதி மோசடி என்றோ, பணம் கொடுக்கப்படவில்லை என்றோ செய்தி வெளியிடவில்லை. சில வெளிப்படைத்தன்மை குறித்தே செய்தி அமைந்திருந்தது.

அதில் பிரதானமானது, கொடுத்த $50,000 பணத்துக்கு அன்பளிப்பு செய்த மாணவருக்கான வைத்தியசாலை பற்றுசீட்டு கிடைக்கவில்லை ($20 க்கு மேல் அன்பளிப்பு செய்தோருக்கு),  நிகழ்வின் வரவு செலவு கணக்கு முடிக்கப்படவில்லை, மாணவருக்கு வழங்கிய வாக்குறுதிகள் என்ன ஆயின போன்றன.  ஏனெனில் இது சிறுவர்கள் சம்பந்தப்பட்ட, அவர்களின் பெற்றோர் சம்பந்தப்பட்ட, அவர்கள் இதை கொடுத்த அல்லது வாங்கியோர் சம்பந்தப்பட்ட மனஉலைச்சல்.

இருப்பினும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அதில் இப்பொழுது கவனம் எடுத்துள்ளனர்.

  • $20 க்கு மேல் அன்பளிப்பு செய்தோருக்கு நிச்சயம் வைத்தியசாலை பற்றுச்சீட்டு வழங்குதல்.
  • மேலும் கிடைத்த நன்கொடை (sponsors) கணக்குகள் முறையாக சமம் செய்யப்பட்டு, இதற்க்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நடன ஆசிரியருக்கும் வழங்குதல் போன்ற முயட்சிகளை முன்னெடுப்பதாக வாக்குறுதி வழங்கியுள்ளனர்.  

இன்னும் சிலவாரங்களில் பற்றுசீட்டு கிடைக்காதவர்கள், உங்கள் ஆசிரியனூடாக சம்பந்தப்பட்டோரை அணுகவும்.

இப்பாரிய நிகழ்வின் வெற்றியை எவ்வித ஐயமும் இன்றி, என்றுமே அனைவரும் கொண்டாடுவோமாக.

எமது தளத்தில்  வந்த செய்தி யாரையும் புண்படுத்தவேண்டும் என்றோ, யாரையும் குறை கூறவோ, தர்மசங்கடத்துக்குள் தள்ளவோ எம்மால் முன்வைக்கப்படவில்லை.

ஒரு பொது நிகழ்வு எவ்வளவு பொறுப்புடன் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்பதை சுட்டிக்காட்டவே சில, பல உதாரணங்கள் முன்வைக்கப்பட்டன.

இதை யாரும் தவறாக எடுத்து தமது குறுகிய நோக்கத்துக்கு பாவித்திருந்தால் கண்டிக்கத்தக்கது. (சந்து கேப்பில் சிந்து பாடி பப்லிசிட்டி தேடுவோர் பலர் கடந்த சில நாட்களாக மலிந்து காணப்படுகின்றார்கள் என்பது வருத்தமே).

இனிவரும் காலங்களில் நிகழ்வு நடத்துவோர் இதில் கவனமாக இருப்பார்கள்,  மற்றும் இப்படியான நிகழ்வுகளுக்கு எதிர்காலத்தில் என்றுமே எமது ஆதரவு இருக்கும் என கூறி, ஒத்துழைப்பு தந்து இந்த செய்தியினுடாக பலரது கேள்விகளுக்கு விடை கிடைத்துள்ளது என்பதை கூறி இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோம்.

நன்றி.


கனடா தனது 150ஆவது பிறந்தநாளை 2017 ஆண்டு நாடு முழுவதிலும் வெகு சிறப்பாக  பல்வேறு நிகழ்வுகளுடன் ஆண்டு முழுவதும் கொண்டாடியது.

அந்த வகையில் கனடிய அரசு சிறு பெரு நிகழ்வுகளுக்காக $500 மில்லியன் நிதியை பல்வேறு அமைப்புகளுக்கும் கொடுத்து கனடா 150 கொண்டாட்டத்தை ஊக்குவித்தது.

வந்தாரை வாழவைக்கும் கனடாவின் பிறந்தநாளை பல்வேறு சமூகங்களும் ஏதோ ஒருவகையில் நிகழ்வுகளாகவும், கலை வடிவங்களாகவும் கொண்டாடியது.

அந்த வரிசையில் டொரோண்டோவில் உள்ள 27 தமிழ் நடன ஆசிரியர்கள் இணைந்து பரதமைல் என்ற ஒரு நடன நிகழ்வை 1150 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களை வைத்து நடத்தி அதில் சேரும் பணத்தை Scarborough Hospital Foundation (SHF) க்கு $50,000.00 நிதியும் வழங்குவதாக பெரும் அறிவித்தலுடன் நிகழ்வு அரங்கேறியது.

எனினும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது முதலே சிறு சிறு சலசலப்புகள் தோன்றினாலும் நிகழ்வு வெளி பார்வைக்கு இனிதே நடந்தேறியது.

ஆனால் இந்த நிகழ்வு பல நடன ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே மிகப்பெரும் மனக்கசப்பையும், ஆரோக்கியமற்ற போக்கையும் ஏற்படுத்தி இன்றும் தொடர்கின்றது.

இந்த நிகழ்வு பற்றி நாம் 7 நடன ஆசிரியர்களிடமும் 20 க்கும் மேற்பட்ட பெற்றோரிடமும் தொடர்புகொண்டு பேசியபோது, பல்வேறு கசப்பான தகவல்கள் வெளியாகின்றது.

ஆரம்பத்தில் இங்கிருக்கும் ஒரு தகுதிக்கு மீறிய புகழை வளர்த்து வைத்திருக்கும் ஒரு நடன ஆசிரியையால், இங்கிருக்கும் நடன ஆசிரியர்கள் தொடர்புகொள்ளப்பட்டு “கனடா 150” க்கு நாங்கள் ஒரு நிகழ்வை சேர்ந்தே செய்வோம் என்று கூட்டம் சேர்க்கப்படுகின்றது.  தன்னுடன் இருக்கும் நபர்களை செல்வாக்கானவர்கள் என்று காட்டப்பட்டு, விழாவுக்கு கனடிய பிரதமரும் வருவார் என்று நம்பவைக்கப்படுகின்றது.

பின்பு Scarborough Hospital இல் நடன ஆசிரியர்களுக்கு ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்படுகின்றது.  அந்த கூட்டத்தில் இந்த விழா மூலம் Scarborough Hospital Foundation SHF க்கு $50000 கொடுப்பதாக சொல்லி, வைத்தியசாலைக்கு வைத்திய சாதனம் வாங்குவது என்று சொல்லி வைத்தியசாலையின் இலட்சினையையும் தமது நிகழ்வுக்கு பாவிக்கின்றார்கள்.

இந்த கொடுக்க வேண்டிய $50,000.00 பணத்தை ஒவ்வொரு மாணவரிடமும் தலா $50 ஆசிரியர்களால் அரவிடப்பட வேண்டும் என்று முடிவாகின்றது.

பங்குபெறும் பிள்ளைகளிடம் $50 கேட்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை சில ஆசிரியர்கள் முன்வைத்தபோது, இதற்க்கு கனடிய பிரதமர் வருகின்றார், அவர் வரும் பொழுது அதிகளவிலான பல்லின ஊடக வெளிச்சம் கிடைக்கும் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன.  அத்துடன் வைத்தியசாலைக்கு நல்லதொரு விடயம் உங்களால் நடக்கிறது என்று கூறப்படுகின்றது.

ஆசிரியர்களுக்கு விண்ணப்ப படிவம் கொடுக்கப்படுகின்றது, விண்ணப்ப படிவம் நிரப்பி $50 கொடுப்பவருக்கே அதில் எங்கு வந்து நிற்கவேண்டும் என்று இடங்கள் (Spots) கொடுக்கப்படுகின்றது.

மேலும் தாங்கள் ASIYANS Texttile இல் சேலைகளை ஒழுங்கு பண்ணியிருப்பதாகவும், ஆசிரியர்களே நேரே சென்று பணத்தை செலுத்தி ஆடைகள் கொள்வனவு செய்து தைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

நாங்கள் ASIYANS Textiles க்கு தொடர்பு கொண்டு கேட்டோம்.  அவர்கள் தாங்கள் மிகவும் குறைந்த விலைக்கே அந்த ஆடைகளை வழங்கியதாகவும், இந்நிகழ்ச்சிக்காக திருமதி நிரோதினி பரராஜசிங்கம், மற்றும் லிங்கன் இருவருமே தம்மை வந்து சந்தித்ததாகவும் கூறினார்கள்.  தானும் மற்றும் பல நடன ஆசிரியர்களும் சேர்ந்து நிகழ்வை நடத்துவதாகவும், SHF க்கு dialysis machine வாங்க உதவிசெய்யவிருப்பதாகவும் கூறி Sponsor எடுத்தார்கள். ஆனால் நிகழ்வில் மேடையில் இவர்கள் சேர்ந்து செய்த வேறு அமைப்பை சேர்ந்தவர்களாலேயே அந்த நிகழ்வு நடத்தப்பட்டதை பார்த்தபோது அதிருப்தி அடைந்ததாகவும், எனினும் தாங்கள் கூறியபடியே $8000 டொலர் கொடுத்தபோதும் இதுவரை எந்த பற்றுச்சீட்டும் தமக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

(இந்நிகழ்ச்சிக்கு மேலும் பல Sponsors எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. )

இது நடந்து கொண்டிருக்கும் போது ஊடகங்களில் இந்த விழா சம்பந்தமாக வெளிவந்த விளம்பரத்தில் “Toronto Tamils’ Fine Arts Association” என்ற அமைப்புக்கு கீழே இந்த 27 ஆசிரியர்களும் நிகழ்வை நடத்துகின்றார்கள் என்பதே அது.  இதை பார்த்தே அனைத்து நடன ஆசிரியர்களுக்கும் தெரியவருகின்றது தாம் ஏதோ ஒரு அமைப்புக்கு கீழே தான் நிகழ்வு செய்கின்றோம் என.  (இது என்ன அமைப்பு, யார் உருவாக்கினார்கள்? எங்கு பதியப்பட்டது? எந்த அமைப்பினுடாக எங்கெல்லாம் நிதி பெறப்பட்டது, கனடா 150 நிதிக்கு விண்ணப்பித்தார்களா?  இது எதற்கும் 27 ஆசிரியகளுக்கோ, மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ எந்த விளக்கமும் இதுவரை இல்லை.)

இப்பொழுதுதான் ஆசிரியர்கள் சிலர் கேள்விகேட்கின்றார்கள். அதாவது நாங்கள் எல்லோரும் சேர்ந்தேதான் நிகழ்வை செய்கின்றோம். இந்த அமைப்பு என்ன?  இந்த அமைப்பு புதிதாக நிகழ்வுக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தால் இந்த 27 பேரில் யாருமே இல்லையே…  இப்படி பல்வேறு கேள்விகள்.

கேள்வி கேட்ட ஆசிரியர்களை மற்ற சில ஆசிரியர்களால் மௌனிக்கப்படுத்தப்படுகின்றனர்.  நமக்கேன் வம்பு, பேசாமல் இரு, இந்த ஆசிரியரை பகைத்தால் நமக்கு வேறு மேடைகள் கிடைக்காமல் செய்திடுவா இப்படி இந்த ஆசிரியர் தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை எப்பொழுதும் கட்டிக்காக்கின்றார்.  அது கலைக்கு சம்பந்தப்படாத கூட்டம்.

(எமக்கு தகவல் தந்தவர்களும், பயந்து பயந்தே தகவல்களை தருகின்றார்கள். அவரின் செல்வாக்கினால் தமக்கு ஏதோ தீங்கு நடக்கும் என எண்ணுகின்றார்கள். ஊடகங்களை நம்ப தயாராக இல்லை. நீங்கள் எல்லாம் அவ வீட்டில் சாப்பிட்டு 100, 200 வாங்கி அவர்களின் துதி பாடுவதாக ஊடகங்கள் மேல் ஒரு வித பய உணர்விலேயே பேசுகின்றார்கள்.  தமக்கு இதுவரை காலமும் நடந்த மனக்கசப்புக்களை சொல்லி புழுங்குகின்றார்கள்.  அவர்களுக்கு எம்மை நம்ப வைப்பதே பெரும் பணியாக இருந்தது.

 

இந்த நடன உலகமே ஒருவருக்கு கீழே தான் உள்ளதுபோன்ற ஒரு மாயை திட்டமிட்ட முறையில் கனடாவிலும் வேறுநாட்டில் இருப்பவர்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.  இதில் வெட்கப்பட வேண்டியது இங்குள்ள ஊடகங்களே.

நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னர் மனக்கசப்பினால் சில ஆசிரியர்கள் வெளியில் செல்ல தீர்மானிக்கின்றார்கள், இருப்பினும் கைநீட்டி பெற்றோரிடம் காசு வாங்கிவிட்டோம், உடைகள் தைக்கப்பட்டு விட்டன.  பலநாட்கள் பெற்றோர் இந்நிகழ்வுக்காக பிள்ளைகளை பயிட்சிக்கு அழைத்துவந்துள்ளார்கள்.  ஒவ்வொரு பிள்ளைகளும் நிகழ்வுக்கு குறைந்தது $300 வரை செலவுசெய்துள்ளனர்.  ஒரு சில பெற்றோர் தமது 3 பிள்ளைகளுக்கு கூட பணம் செலுத்தியுள்ள நிலையில் ஆசிரியர்களால் பெற்றோருக்கு பதில் சொல்ல முடியாத நிலைமை.

பின்னாளில் கனடிய பிரதமருக்கு முன்னால் தமது பிள்ளைகள் ஆடவிடாமல் செய்தால் பழி ஆசிரியரையே சேரும் என்ற அச்ச உணர்வால், பெரும் மன உளைச்சலுடன் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கி நிகழ்வை நிறைவு செய்தனர்.

நிகழ்வு முடிந்தபோது மேடையில் வைத்து SHF க்கு மாதிரி காசோலை வழங்கப்படுகின்றது.  இதற்கு சம்பந்தமில்லாதவர்கள் மேடையில் நிற்கின்றார்கள். மேடைக்கு எந்த ஆசிரியரும் அழைக்கப்படவில்லை.

இருப்பினும் அங்கிருந்த சில ஊடகவியலாளர்கள் மேடைக்கு கீழே நின்ற நடன ஆசிரியர்களை மேடைக்கு ஏறுங்கள், நீங்கள் தானே நிகழ்வு செய்தீர்கள் என்று உற்சாக்கப்படுத்தி மேடையேற்றி அந்த மாதிரி காசோலை வழங்கப்படுகின்றது.

ஆசிரியர்களால் மாணவர்களுக்கு இதில் பிரதமர் வருகின்றார், உங்களுக்கு Volunteering hours கிடைக்கும், குடுத்த பணத்துக்கு வைத்தியசாலையில் இருந்து பற்று சீட்டு கிடைக்கும் என்று இன்னோரன்ன காரணங்கள் சொல்லப்பட்டே இவ்வளவு பெரும் எண்ணிக்கையான மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தார்கள்.

இறுதியில், பிரதமரும் வரவில்லை. எந்த பல்லின ஊடகமும் வரவில்லை. பங்குபற்றிய மாணவர்களுக்கு Volunteering hours உம் இதுவரை வரவில்லை.  எந்த பணம் செலுத்திய மாணவருக்கும் இதுவரை பற்றுசீட்டும் கிடைக்கவில்லை.

இதுபற்றி SHF உடன் தொடர்புகொண்டு கேட்டோம். இது ஒரு 3rd party அன்பளிப்பு என்றும், $50000 பெற்றுக்கொண்டதாகவும், அதை நிரோதிதி பரராஜசிங்கம் ஒரு நிகழ்வு வைத்து கொடுத்ததாகவும், மேலதிக தகவல்களை அவரை தொடர்புகொண்டு கேட்கவும் என்ற பதிலை SHF  இடமிருந்து பெற்றுக்கொண்டோம்.

Letter From SHF

ஒவ்வொரு மாணவர்களுக்கும் $50 அன்பளிப்பு, உடை, தையல் கூலி, பயிட்சி என தலா $300 வீதம் 1150 மாணவர்களின் மொத்தம் $345,000 பணமும், பல்லாயிரக்கணக்கான மனித மணித்தியாலங்களும் ஒருவரின் புகழுக்காக அந்த புல்வெளியில் வீணடிக்கப்பட்டுள்ளதே என்பது எல்லோராலும் சிந்திக்க வேண்டிய விடயம்.

பின்பு இவர்களால் பல்லின ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்தியில் அந்த ஒரு ஆசிரியரின் பெயரும் 1150 பேரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஒரு ஆசிரியரின் மகளின் முகமுமே விளம்பரப்படுத்தப்படுகின்றது.

எங்கே போகின்றது, எதை நோக்கி போகின்றது என்பதில் சமூகம் தனது அக்கறையை செலுத்தவேண்டிய தருணமிது. எது நடந்தால் எமக்கென்ன என பாராமுகமாக இருந்தால் இப்படியான துன்பியல் நிகழ்வுகள் அரங்கேறிக்கொண்டே இருக்கும்.

ஒட்டுமொத்தமாக இது மற்றவர்களின் உழைப்புகள் திருடப்பட்டுள்ளன என்பதே இந்த நிகழ்வு சொல்லும் செய்தி.

இந்த நிகழ்வுக்கு ஏன் இந்த விமர்சனம்?, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? எனும் விளக்கங்கள் ஏற்பாட்டாளர்களினால் தரப்படுமிடத்து அதையும் நாம் பதிவேற்றம் செய்ய தயாராக இருக்கின்றோம்.ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கு கனடிய தமிழர்களின் பங்களிப்பு.