யாழ்ப்பாண நூலகத்திற்கு ஒரு இரங்கற்பா!

இப்படித்தான் சில புத்தகங்கள் சுவையான தகவல்களை (அரிதானவை கூட!) சுவைபடவே சொல்லியிருந்தாலும், வெளி வந்த பொழுதில் தொடங்கி எவரேனும் அதை எங்கேனும் பதிவு செய்யும் வரை கூட வாசக கவனத்திற்கு வாராதிருப்பதுண்டு. அவ்வாறானவை பாரதி புத்தகாலயத்தில் நிறைய என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ரூ.10/- அளவிலான ஒரு சிறு பிரசுரம் ஒன்று இது. பத்து நிமிடங்கள் மட்டுமே அதன் வாசிப்பு காலமாக இருக்கும்.


ஏப்ரல் 2017ல் பாரதி புத்தகாலயத்தாரால் பதிக்கப்பட்ட இது, அநேகமாக வாசகர்கள் பலரும் அறியாதது (யாரும் இந்நூல் பற்றி பெரிதாக விளம்பரப்படுத்தியிருக்கவில்லை, அதுதான் அளவீடு).

யாழ்ப்பாண நூலகத்திற்கு ஒரு இரங்கற்பா” என்னும் ரோஜா முத்தையா நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் எழுதியதே இந்நூல்.

ஹிட்லர் 1933ல் ஜெர்மனியின் நூலகத்தை எரித்த பொழுதில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஒரு நூலகம் உருவாக்கம் என்ற கருத்தாக்கம் சூல் கொள்கிறது.

நீதித்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த கே.எம்.செல்லப்பா முதன் முதலில் இது குறித்து சுற்றறிக்கையினை பலருக்கும் அனுப்புகிறார். 1934 ஆகஸ்ட் 1ல் இருந்து செயல்பட தொடங்குகிறது. ஒரு 25 வருட இடைவெளியில் நூல்களின் பெருக்கம் காரணமாக புதிய கட்டிடத்தில் பல்வேறு வசதிகளோடு 1959 அக்டோபர் 11ல் திறக்கப்படுகிறது. பின்பு 1983ல் நடைபெற்ற புத்தமத பேரினவாத போரில் தமிழின அழித்தொழிப்பில் இரு அமைச்சர்கள் தலைமையில் ஒரு நூல் கூட பாக்கியிராமல் எரிக்கப்படுகிறது. நூலகம் எரிக்கப்பட்ட சேதி டேவிட் என்பாரை மரணம் அடைய செய்கிறது. பின்பு ஒருவாறு மீண்டும் எழுப்பப்பட, பேரினவாதம் மீண்டும் அந்நூலகத்தை சின்னாபின்னாமாக்குகிறது.

வரலாறு நெடுக இனம், மதம், சாதி, மொழி ஆதிக்க போர்களில் கலவரங்களில் அழித்தொழிக்கப்படுவனவற்றில் நூலகங்கள் பெரும் இடங்களை பெறுகின்றன.

கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ்-பாஜக குண்டர்கள் தோழர் ஏ.கே. கோபாலன் நூலகம் எரித்ததையும், பின்பு அதே நூலகம் இன்னும் பெரும் பங்களிப்பில் கூடுதல் புத்தகங்களோடு கம்பீரமாக எழுந்து நின்ற நிகழ்கால சம்பவமும் நினைவில் தவறாமல் வருகிறது.

சரி, இந்நூலில் அப்படி என்னதான் சிறப்பு. தமிழர்கள் புத்தகங்களோடு, வாசிப்போடு, அறிவு தேடலோடு எவ்வளவு உணர்வுபூர்வமாக உளப்பூர்வமாக நின்றார்கள் என்பது இப்புத்தகத்திலிருந்து விளங்குகிறது.

இந்நூலில் ஓர் இடத்தில், “தொழிற்சாலை ஒன்றில் மையமான மேடை பகுதியிலிருந்து நூலகத்திலிருந்து பெறப்பட்ட தினசரி ஒன்றினை தொழிலாளி ஒருவர் சத்தமாக வாசிக்க, மற்றவர் அதை கேட்டபடி வேலையை தொடர்கின்றனர்” என்பதும், “அப்பகுதியில் எவர் ஒருவரும் பட்டப்படிப்பு முடித்து பட்டம் பெற்றாலும், அவரின் குடும்பத்தினர் கோயில் முன் படையலிடுவது போல் யாழ்ப்பாண நூலகத்திற்கு முன் படையலிடுவார்களாம்” என்பதெல்லாம் வாசிக்கையில் எவ்வளவு பெருமிதம்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய தமிழ் என்ற அபத்தத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இவ்வாறான பெருமிதங்களையும் படித்து தமிழ் பற்று வளர்க்கலாமே!

வண்ண அட்டைப்படம் போட்டால் இந்தப் சிறு புத்தகத்தின் விலை இந்திய ரூ.10/-ஐ தாண்டிவிடும் என்பதால் அட்டைப்படம் கூட பாரதி புத்தகாலயத்தார் கருப்பு வெள்ளையில் போட்டிருக்கிறார்கள்.

வாசித்துதான் பாருங்களேன்

TorontoTamil.com