கனடா வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை!

கனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற குறித்த வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு மணித்தியாலங்கள் இடைவெளியில் இவ்வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

மாலை 6.30 மணியளவில் முதலாவது வெடிப்புச் சம்பவம் பாதிவாகியதோடு, அதில் காயமடைந்த 21 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இரண்டாவது வெடிப்புச் சம்பவம் இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் மற்றும் அவசர பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். எனினும், சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லையென பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், சந்தேகநபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லையென்றும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கனேடிய ரோயல் மவுண்ட் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் அப்பிரசேத்தில் தீவிர சோதனை நடத்தியதோடு, பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.