டொரொன்டோவில் சர்க்கார் – ஒரு விரலை வைத்து ரசிகர்களின் கண்களைக் குத்தியக் கொடூரம்!

நடிகர் விஜயின் சர்க்கார் திரைப்படம் உலகெங்கும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் இன்று தீபாவளிக்கு வெளியாகியது.  நேற்று இது Woodside சினிமாவிலும் திரையிடப்பட்டிருந்தது. படம்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை சர்க்கார் ஏமாற்றிவிட்டது.

சர்கார் என்று ஒரு படம் கதை திருடி எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கதை எதற்காக திருடப்பட்டது என்று தான் விளங்கவில்லை. கதை மட்டுமல்ல ஒட்டுமொத்த படத்துக்கும் ஒரிஜினல் கிரியேட்டிவிட்டிக்கும் கிஞ்சித்தும் சம்பந்தமே கிடையாது. பெரும்பாலும் எல்லாமே காப்பி தான். உதாரணமாக, படத்தில் கதாநாயகன் விஜயின் பெயர் சுந்தர் ராமசாமி. அவர் GL என்ற சாஃப்ட்வேர் நிறுவனத் தலைவர். இது, Google CEO சுந்தர் பிச்சையின் காப்பி. சரி பெயர் தானே என்று பார்த்தால் விஜய் வைத்திருக்கும் கறுப்பு வெள்ளை தாடி கூட பிச்சையிடம் பிச்சை எடுத்தது தான். படத்தில் காட்டப்படும் ‘வில்லன்’ பழ கருப்பையா வாழும் வீட்டின் உட்புற அமைப்பு, அங்குள்ள புத்தக அலமாரி, ஆளுயர சிலை, குறிப்பாக திருவள்ளுவர் சிலை எல்லாம் கலைஞரின் கோபாலபுர வீட்டின் காப்பி, வில்லன் இறந்த பிறகு கட்டப்படும் சமாதியில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய புகைப்படம் கலைஞரின் சமாதியை நினைவூட்டுகிறது.

Woodside Cinema வில் சர்க்கார்

தேர்தலுக்கு முன்பு தலைவர் இறந்துவிட்டால் மக்கள் எல்லோரும் மற்றவற்றை மறந்து அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்று கலைஞர் மரணத்தின் போதான நிகழ்வுகளை சுட்டிக்காட்டுவது போல காட்சிகள்! இந்தப் படத்தை எடுத்தது சன் பிக்சர்ஸ் நிறுவனமாம்! பிரமாதம்!

Woodside Cinema வில் சர்க்கார்

அந்த தலைவர் எப்படி இறப்பாராம்? அவருடைய மகளே மாத்திரையை ஓவர்டோஸ் கொடுத்து சாகடிப்பாராம். இந்த மர்மமரணம் உங்களுக்கு எதை நினைவுப்படுத்துகிறது? So, இந்தக் காட்சி ஒரு குற்றச்சாட்டின் காப்பி! வில்லனின் கட்சிப் பெயர், அலுவலகக் கட்டடம் தமிழகத்தின் ஒரு பெரிய கட்சியின் காப்பி!

படத்தில் தேர்தல் முடிந்ததும் முதலமைச்சராக விஜய் பரிந்துரை செய்யும் நேர்மையான ‘சற்குணம் ஐஏஎஸ்’ எந்த ஐஏஎஸ்ஸின் காப்பி என்று உங்களுக்கே தெரியும்! எல்லாவற்றுக்கும் மேலாக, இடைவேளையில் விஜய் சொல்லும் ‘I am waiting’வசனம் இவரின் முந்தைய படத்தின் காப்பி! ஏம்ப்பா இதக் கூடவா காப்பி அடிக்கணும்? ஏதாவது புது வசனம் ட்ரை பண்ணியிருக்கலாமே?

படத்தில் செம காமெடியான காட்சிகளை சீரியஸான காட்சிகளாக எடுத்து வைத்திருக்கிறார்கள். வில்லனின் கட்சி அலுவலகத்துக்குள் விஜய் நுழைவார். துணை வில்லன் ராதாரவி தனது வழக்கறிஞருக்கு போன் போட்டு, ‘அவனை இங்கேயே வச்சி போட்டுடலாமா’? என்று கேட்டதும் அந்த வழக்கறிஞர் ‘சீனியரிடம் லீகல் ஒப்பீனியன் கேட்டுவிட்டு சொல்கிறேன்’ என்பதெல்லாம் வடிவேலு கூட முயற்சிக்காத காமெடி! ஒரு குப்பத்தில் தன்னை எதிர்க்கும் ஆயிரக்கணக்கான மக்களிடம் 10 நிமிட வசனம் பேசி அவர்களை தன்னுடைய அதிதீவிர விசுவாசிகளாக விஜய் மாற்றும் காட்சியை ‘கலக்கப்போவது யாரு’ ஷோவில் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

அமெரிக்காவில் இருந்து கூடவே வந்த வெள்ளைக்கார பாடிகார்ட்களிடம் விஜய் தமிழில் பேசுகிறார். ஆனால், அவர்கள் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார்கள். அடங்கப்பா! இன்னொரு காப்பியும் உண்டு. படத்தில் வரும் பிரபல வழக்கறிஞரின் பெயர் மலானி! அவருக்கே தெரியாத லீகல் பாயிண்ட் எல்லாம் நம்ம விஜய்க்கும் தெரிஞ்சிருக்கு! (ஒரு அளவு இல்லையா). சரி இதுகூட போகட்டும். ஒரு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட குழந்தை இருக்கும். அந்த குழந்தையை காட்டி விஜய் ‘பொதுப்பணித் துறையை’ திட்டுவார். யப்பா முருகதாசு, இதுக்கு நீங்க திட்ட வேண்டியது சுகாதாரத் துறையை! இந்த லட்சணத்தில், விஜய் ‘மெரிட்ல’ படிச்சி பெரிய கம்பெனி CEO ஆனவராம்! இடஒதுக்கீடு மேல முருகதாஸ்க்கு அப்படி என்ன தான் காண்டோ! ( அடக்கெரகத்த). படத்தில் நடக்கும் தேர்தலில், மதியம் 2.30 மணி வரைக்கும் வில்லனுக்கு ஆதரவாக நடக்கும் வாக்குப்பதிவு, விஜய் Facebookஇல் ஒரு வீடியோ போட்டப் பிறகு அப்படியே இவருக்கு சாதகமா மாறிடுமாம்! கொல்றாங்கடா சாமி!

மிகப்பெரிய காமெடி, விஜய்யின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் 210 தொகுதிகளில் சுயேட்சையாக தனித்தனி சின்னங்களில் ஜெயிப்பது தான்! ஹாலிவுட் fictionல கூட இந்த அளவுக்கு யோசிப்பாங்களானு தெரியல!

படத்தில் இடைவேளையின் போது, தியேட்டருக்குள்ளேயே நடைபாதையில் அமர்ந்து விஜய் ரசிகர்கள் சரக்கு அடித்துக் கொண்டிருந்தார்கள். பிறகு தான் அதற்கான காரணம் புரிந்தது! படக்குழுவுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்: படத்தில் விஜய் வரும் காட்சிகளை slow motionஇல் காட்டாமல் இருந்திருந்தால் படம் ஒரு அரை மணி நேரம் முன்னமே முடிந்துவிடும்.

யாருயா முருகதாசு கதைய திருடுனானு சொன்னது😳😳😳

அந்த கதைய எழுதுனவன கூட்டிட்டு வாங்கயா… நஸ்ட ஈடு வாங்கனும்… $30 செலவு totally waste…