மாநிலங்கள் இடையேயான வர்த்தக தடங்கல்களை குறைத்துக் கொள்வது அவசியம்: டக் ஃபோர்ட்

நாட்டின் பொருளாதாரத்தை போட்டித் தன்மையுடன் வைத்துக் கொள்வதற்கு, மாநிலங்கள் இடையேயான வர்த்தக தடங்கல்களை குறைத்துக் கொள்வது மிகவும் முக்கியமானது என ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ மற்றும் சாஸ்காச்சுவான் மாகாணங்களுக்கிடையிலான வர்த்தக தடைகளை குறைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், அவர் இந்த கருத்தினை முன்வைத்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் கூறுகையில், “கனேடிய மத்திய அரசாங்கம் அனைத்துலக அளவிலான வர்த்தக இணக்கப்பாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான வர்த்தக உடன்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், நாங்கள் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.

இவ்வாறு உள்நாட்டு அளவில், மாநிலங்கள் இடையேயான தடைகளை அகற்றிக் கொள்வதே, கனடாவுக்கு அதிகளவு முதலீட்டாளர்களை ஈர்க்க வழி செய்யும் என்பதை, பல்வேறு வர்த்தக தலைவர்கள் மூலம் அறிந்து கொண்டுள்ளோம்” என கூறினார்.