குளிர் கால நேரமாற்றம்

கோடை காலத்தில் பகல் பொழுது அதிகமான காலங்களில், ஒளி பெறுவதற்கு சக்தியை விரயமாக்காமல், சூரிய ஒளியைச் சேமிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட Daylight Saving Time நடைமுறை நவம்பர் 4ம் திகதியுடன் முடிவுக்கு வருவதன் மூலம் வழமையான நேரத்திற்கு திரும்புகிறது.

எனவே சனிக்கிழமை இரவு படுக்கைக்கு போகும் போது, உங்கள் மணிக்கூடுகளை ஒரு மணி நேரம் பின்னோக்கி தள்ளுவதன் மூலம், ஒரு மணி நேரம் அதிகமாக நித்திரை செய்ய முடியும். இந்த நேரமாற்றம் நவம்பர் மாத முதல் வாரத்தில் நடைமுறைக்கு வருகிறது. இதைப் போல, பனிக்குளிர் முடியும் போதும் நடைமுறைக்கு வரும். இதை நினைவில் வைத்திருக்க, Spring Forward, Fall Back என்ற வார்த்தையை மனதில் இருத்தலாம்.

Spring forward என்பது துள்ளிப் பாய்தலையும், Fall back என்பது பின்வாங்கி நிலைபெறுவதையும் குறிப்பதாக இருந்தாலும், ஒரு சிலேடைப் பாவனையாகப் பயன்படுத்தப்படுகிறது.

இலைதளிர் காலத்தில் நேரம் முன்னே நகர்த்தப்படுவதையும் இலையுதிர் காலத்தில் பின்னே நகர்த்தப்படுவதையும் இது குறிக்கும். கனடாவில் சில இடங்களில் முக்கியமாக சஸ்கச்சேவன் மாநிலத்தில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதில்லை. தமிழர்கள் அங்கே செறிந்து வாழாதபடியால் அவர்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது.

மணிக்கூட்டை மாற்றும் கையோடு, உங்கள் வீடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு வழமையில் அறிவுறுத்தப்படும். உங்கள் வீடுகளில் உள்ள காபனோர் ஒட்சைட் வாயு (CO2) உணர்கருவி, தீப் பற்றினால் துள்ளியெழுப்பும் புகையுணர் கருவிகளுக்கான மின்கலங்களை மாற்றி புதியவற்றை பொருத்துங்கள். கோடை காலம் முழுவதும் வீட்டைக் குளிராக்கும் குளிர்பதனக் கருவி வேலை செய்து, தூசி அடைத்திருக்கும் தூசி வடிகட்டியை, குளிர்காலத்தில் சூடு வரச் செய்யும் வளிசூடாக்கிகள் சரியாக செயற்படுவதற்காக மாற்றுங்கள்.

வீட்டுக் கூரைகளில் மழை வழிந்தோடும் தகர வாய்க்கால்களில் குப்பை கூழங்கள் கிடந்தால், அவை மழையை வழிந்தோட விடாமல் தடுக்க, மேவிப் பாயும் நீர் கூரைக்குள்ளால் நிலக்கீழ் அறையை நிறைக்கலாம். அவற்றையும் துப்புரவாக்குங்கள்.

பிறகென்ன? மேலதிகமாகக் கிடைத்த ஒரு மணி அதிகாலை நேரத்தில் நன்றாக தூங்குங்கள். மறந்து போய் நேரத்தை மாற்றாமல் விட்டு திங்கள் வேலைக்குப் பிந்தாமல் போகவும்.