ஒன்ராறியோ மாநில அரசின் அமைச்சரான ஜிம் வில்சன் பதவி விலகல்!

டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாநில அரசின் அமைச்சரவை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜிம் வில்சன் பதவி விலகியுள்ளதாக ஒன்ராறியோ முதல்வரின் அலுவலகம் அறிவித்துள்ளது.


மருத்துவ சிகிச்சை ஒன்றினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக, அவர் பதவி விலகியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தனது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியில் இருந்தும், வேலை வாய்ப்புகளை உருவாக்கல் மற்றும் வர்த்தக அமைச்சுப் பதவியில் இருந்தும் உடனடியாக நடப்புக்கு வரும் வகையில் அவர் விலகுவதாக முதல்வர் டக் ஃபோர்ட்டின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜோர்ஜியன் பேயின் சிம்கோ க்ரே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அவர், முதன்முதலில் 1990ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வானதுடன், சுகாதார அமைச்சர், சக்தி வளத்தறை அமைச்சர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.