இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்களுடன் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் பேச்சுவார்த்தை!

கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்களுடன் ஈடுபட்டதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நேற்று வரை இஸ்ரேலில் தங்கியிருந்த அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட், அங்கு இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டார்.

ஜோர்தானுக்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து நேரடியாக இஸ்ரேல் சென்றிருந்தார். அத்தோடு, நாடு திரும்ப முன்னர் சில மணி நேரங்கள் அவர் பாலஸ்தீன அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை தனது இந்த பயணம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள கிறிஸ்டியா ஃபிறீலான்ட், ஜோர்தான் மக்களுடனும், இஸ்ரேல் மக்களுடனும், பாலஸ்தீன மக்களுடனும் கனேடியர்கள் மிக நீண்டகால நட்பினைக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கனடாவின் முக்கிய பங்காளிகளான இந்த நாடுகளுக்கு இந்த வாரத்தில் தான் பயணம் மேற்கொள்வதாகவும், கனடாவுடன் இந்த நாடுகளுக்கு ஏற்கனவே உள்ள நட்புறவினை பலப்படுத்திக்கொள்ள இந்தப் பயணம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கனேடிய வெளியுறவு அமைச்சராக கிறிஸ்டியா ஃபிறீலான்ட், பதவியேற்ற பின்னர் இஸ்ரேலுக்கு செல்லும் முதல் பயணமாக இது பதிவாகியுள்ளது.

அத்துடன் 2015ஆம் ஆண்டில் ஜஸ்டின் ரூடோ பிரதமராக பதவியேற்ற பின்னர் கனேடிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் இஸ்ரேலுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.