முன்னாள் ஆளுநர்கள் தங்கள் செலவீனங்கள் குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்: பிரதமர்

கனடாவின் ஓய்வுபெற்ற ஆளுநர்கள் தங்கள் செலவினங்கள் தொடர்பாக மேலும் வெளிப்படையுடன் மற்றும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என, பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார்.

கனடாவின் ஆளுநர்கள், ஓய்வுபெற்றதன் பின்னரும் அவர்களுக்கான நிதி ஆதரவினை பெற்றுக் கொள்வதற்கு உரித்துடையவர்களாக காணப்படுகின்ற நிலையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டுவரை ஆளுநராக திகழ்ந்த ஏட்றியன் க்ளாக்சன், தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னரான செலவீனமாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை பட்டியலிட்டுள்ளார்.

குறித்த முன்னாள் ஆளுநரின் இச்செயற்பாடு குறித்து நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஆளுநர்கள் நாட்டின் நலனுக்காக மிகுந்த சேவையாற்றியவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், அவர்களது செலவீனங்கள் தொடர்பில் கனேடிய மக்கள் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கின்றனர். எனவே, இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.