நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது :

புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்!

தலைமைத் தேர்தல் ஆணையாளராக கனடா ரொரென்ரோவில் வாழும் திரு பொன் பாலராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார்.

இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையின் பொறுப்பில் மேற்கொள்ளப்படும்.

மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி எடுத்த பின்னர் புதிய அரசவை உறுப்பினர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். பிரதமர் புதிய அமைச்சரவையினை அமைத்துக் கொள்வார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவவது அரசவை அமைக்கப்படும் முறைமை குறித்த தகவல்கள் பின்வருமாறு :

2010ம் ஆண்டு தேர்தல்கள் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை அமைக்கப்பட்டது.

தமிழீழ மக்களுக்குரிய அரசமைக்கும் உரிமையினைக் குறியீட்டுவடிவில் உணர்த்தும் வகையில், அரசுகளைக் கொண்டுள்ள நாடுகள் தமது அரசாங்கத்தை அமைத்துக் கொள்ளும் கட்டமைப்பை ஒத்த வடிவத்தில், நாமும் எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கட்டமைப்பை அமைத்துக் கொண்டோம்.

இதேவேளை நாம் ஒரு அரசை இன்னும் அமைத்துவிடவில்லை என்பதனையும், தமிழீழ மக்களுக்கான ஓர் அரசை அமைப்பதற்காகச் செயற்படுவதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதன்மை இலக்கு என்பதனையும் உணர்ந்தவர்களாகவே நாம் செயற்பட்டு வந்துள்ளோம்.

முதலாவது அரசவைக் காலம் மூன்றாண்டுகளைக் கொண்டிருந்தது. முதலாவது அரசவைக்காலம் நிறைவுற்று அரசவை கலைந்த பின்னர் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு இரண்டாவது அரசவைக்காலத்துக்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்;. முதலாவது அரசவை கலைவதற்கு முன்னர் இரண்டாவது அரசவைக்காலத்தை 5 வருடங்களாக நீடிப்பதென்ற அரசியலமைப்பு மாற்றத்தை அரசவை மேற்கொண்டிருந்தது.

அதன் அடிப்படையில் 2013 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தேர்வு செய்யப்பட்ட அரசவையின் காலமே தற்போது நிறைவடைகிறது.  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை மற்றும் அமைச்சரவை, நெறிமுறை ஆணையம், மதியுரைக் குழு, மேலவை போன்ற அரசியல் கட்டமைப்புகளின் ஊடாக, நாம் கடந்த 8 ஆண்டுகளாக எவ்வாறு ஜனநாயகமுறையில் அமைந்த ஓர் அரசின் கட்டமைப்பு செயற்படுமோ அதே போன்ற ஒழுங்குடன் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொண்டிருக்கிறோம்.

கொள்கை சார்ந்த முடிவுகளை அரசவையும், நிர்வாகம் சார்ந்த முடிவுகளை அமைச்சரவையும் எடுக்கும் வகையில் நாம் செயற்பட்டு வருகிறோம். அரசவை உறுப்பினர் அனைவரும் நேரடியாகச் சந்திக்கும் வகையில் வருடம் இரு தடவைகள் நேரடி அமர்வுகளையும், ஓவ்வொரு மாதமும் தவறாது முதல் சனிக்கிழமையன்று தொலைத்தொடர்பு ஊடகவழி மூலமான நிகழ்நிலை அமர்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கோண்டு வந்திருக்கிறோம்.

இதன் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தன்னையொத்த விடுதலை அரசியல் இயக்கங்களுக்;கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறதென்ற உண்மையையும் இவ்விடத்தில் பதிவு செய்தாக வேண்டும். எமக்கிடையே எழக்கூடிய பல்வேறு வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளையெல்லாம் அரசவை அமர்வுகளின் போது நாகரீகமான முறையில் விவாதித்து முடிவுகளை எடுக்கும் பக்குவத்துடன் அரசவை உறுப்பினர்கள் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயகமுறைக் கட்டமைப்பு என்ற நிலையில் இருந்து பார்க்கும்போது இவ் ஒழுங்குகள் எல்லாம் எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகின்றவையே.

இனி அமையவுள்ள மூன்றாவது அரசவைக்கு திறமையுள்ள புதியவர்களை உறுப்பினர்களாக இணைத்;து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பது எமது வேணவா.

புதிய அரசாங்கத்தினை தேர்தல் மூலம் அமைத்துக் கொள்வதற்காகவென எமது அரசியலமைப்புக்கு அடங்கிய வகையில் அரசவையின் பரிந்துரைக்கேற்ப பிரதமர் என்ற ரீதியில் நான் தலைமை தேர்தல் ஆணையத்தை நியமித்துள்ளேன். இவ் ஆணையமே தேர்தல்களைப் பொறுப்பெடுத்து நடாத்தும். இவ் ஆணையம் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் செயற்படும். தேர்தற்திகதியினையும் ஆணையமே அறிவிக்கும்.

பின்வருவோர் இவ் ஆணையத்தில் உறுப்;பினர்களாக உள்ளனர்.

தலைமைத் தேர்தல் ஆணையாளர்:

திரு பொன் பாலராஜன் (கனடா, ரொறன்டோ). இவர் அத்தாட்சிப் படுத்தப்பட்ட கணினி கட்டமைப்புத் துறை நிபுணர் (Certified Cloud Architect), ஒன்ராறியோ மாகாண அரச நிறுவனமொன்றில் கணினி கட்டமைப்புத் துறை நிபுணத்துவ ஆலோசகராக பணிபுரிந்து வருபவர். தொலைக்காட்சி – வானொலி விமர்சகர். மற்றும் கலை நாடகத் துறை ஆர்வலர். இவர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னை நாள் அவைத் தலைவரும் ஆவார்.

தலைமைத் தேர்தல் ஆணைய உறுப்பினர்கள்:

செல்வி லக்ஷ்மி லோகதாசன் (அவுஸ்திரேலியா, சிட்னி). இவர் மேற்கு சிட்னி பல்கலைக் கழகத்தில் சட்டவியல் மற்றும் சர்வதேச கற்கையியல் துறைகளில் இறுதி ஆண்டு மாணவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான இளைய தலைமுறை பெண் எனும் விருது பெற்றவர். அத்துடன் துணைவேந்தரின் தலைமைத்துவப் பரிசு, 2015 க்கான புதிய கொழும்புத் திட்டப் புலமைப் பரிசுகளும் பெற்றவர்.

திரு றோனி மறுசலீன் (பிரான்ஸ், பாரிஸ்);. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றுப் பின்னர் விரிவுரையாளராகவும் இருந்தவர். பிரான்ஸ் நாட்டில் நெடுங்காலமாக நன்கறியப் பட்ட சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார்.

பிரதமர் ருத்ரகுமாரன் அவர்கள் தனது அறிக்கையின் நிறைவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அரசவைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் முறைகளில் தேர்தல் ஆணையத்தின் தனித்துவமானதும் சுதந்திரமானதுமான செயற்பாட்டுக்கு அனைவரது ஆதரவினையும் ஒத்துழைப்பினையும் வேண்டியுள்ளார்.