சமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை பாராட்டிய ஒருவர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்!

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை பாராட்டி அவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.


ஒத்மன் ஹெம்டன் என்ற நபரால் நாட்டின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் எழலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை இந்த முடிவுக்கு வந்துள்ளது.

முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஐ,எஸ் அமைப்புக்கு ஆதரவு கருத்துகளை பதிவிட்டதாக கூறி ஜோர்தானில் குடியுரிமை பெற்ற ஒத்மன் அயீத் ஹெம்டன் என்பவரை கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவின் போர்ட் செயின்ட் ஜானில் வைத்து கனேடிய அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில், கனேடிய பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஹெம்டனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை அவரை உடனடியாக நாடுகடத்த முடிவு செய்துள்ளது.

பாலஸ்தீன நாட்டவரான ஹேம்டன் ஐக்கிய அமீரகத்தில் பிறந்தவராவார். ஆனால் ஜோர்டான் நாட்டில் குடியுரிமை பெற்றுள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வொஷிங்டன் வழியாக கனடாவுக்குள் குடியேறிய அவரது புகலிட கோரிக்கையை ஏற்ற கனடா அரசு அகதிக்கான அந்தஸ்தை வழங்கியது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் Fort St. John பகுதியில் வசித்து வந்த நிலையில் பயங்கரவாத தொடர்பு காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு சிறப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹெம்டன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று (வௌ்ளிக்கிழமை) கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் சபை அவரை உடனடியாக நாடுகடத்துமாறு வலியுறுத்தியுள்ளது.