வரலாற்று சிறப்பு மிக்க சுவரில் கிறுக்கிய கனடா பெண் மன்னிப்பு கோரியுள்ளார்!

தாய்லாந்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதன சுவரில் விசிறல் நிறப்பூச்சால் எழுதியமைக்காக பொலிசாரால் கைது செய்யப்பட்ட கனடாவைச் சேர்ந்த இளம்பெண் தனது செயலுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.


எனினும், அடுத்த கட்ட சட்டநடவடிக்கை குறித்து அச்சமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது நண்பர்களோடு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த பிரிட்னி ஷ்னெய்டர் (22) என்பவர், பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு நண்பருடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு திரும்பும்போது ஒரு விசிறல் நிறப்பூச்சு குடுவையொன்று கிடப்பதைக் கண்டு அதை எடுத்துள்ளார்.

பிரிட்னியின் நண்பரான லீ, அங்கிருந்த ஒரு சுவரில் Scouser Lee என்று விசிறல் நிறப்பூச்சால் எழுதவே, பிரிட்னியும் அதற்கு கீழே B என்று ஸ்பிரே செய்துள்ளார். அவர்கள் ஸ்பிரே செய்த சுவர ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசால் பாதுகாக்கப்படும் ஒரு புராதன நினைவிடமாகும்.

அதை சேதப்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது அந்த நாட்டின் சட்டமாகும். இவர்களின் செயற்பாட்டை அங்கிருந்த CCTV கெமரா பதிவுகளில் கண்ட தாய்லாந்து பொலிசார் மறுநாள் Brittney மற்றும் Lee இருவரையும் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவர் மீதும் புராதன நினைவிடங்களை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த குற்றத்திற்காக அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 40,000 டொலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் செய்த செயலுக்காக பிரிட்னி வருத்தம் தெரிவித்துள்ளார்.

நான் செய்த செயலுக்காக மன்னிப்புக் கோருகிறேன், என் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்திருக்கிறேன், பலவித உணர்ச்சிகளுக்கு ஆளாகியிருக்கிறேன், எனக்கு வீட்டுக்குப் போனால் போதும் என்று கூறியுள்ளார்.