சவுதிக்கு எதிராக கனடாவும் நடவடிக்கை!

சவுதி அரேபியாவிற்கு இலகுரக கவச வாகனங்களை விற்பனை செய்யும் 15 பில்லியன் டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தை ரத்துசெய்ய கனடா தீர்மானித்துள்ளது.


சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலைசெய்யப்பட்டதன் பின்னணியில் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இந்த அறிவிப்பை நேற்று (புதன்கிழமை) விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ட்ரூடோ, குறித்த ஒப்பந்தம் தொடர்பாக கணிசமான நிதி அபராதங்களை விதிக்கப்போவதாக குறிப்பிட்டிருந்தார்.

எனினும், கஷோக்கியின் கொலை மிருகத்தனமானதென்றும், அதற்கு தகுந்த விளைவுகளை கனேடியர்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர், அதன் பிரகாரம் இந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்ய தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, உண்மையிலேயே ஜமால் கஷோக்கிக்கு என்ன நடந்தது, எவ்வாறு நடந்ததென கனேடிய மக்கள் மட்டுமன்றி முழு உலகமும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இஸ்தான்புல்லிலுள்ள சவுதி தூதரகத்திற்குச் சென்ற கஷோக்கி அங்கு கொலைசெய்யப்பட்டதை சவுதி ஏற்றுக்கொண்டுள்ளது. அதற்கு உரிய காரணங்களை முன்வைக்காத நிலையில், உலக நாடுகள் சவுதியிடம் விளக்கம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.