சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

கனடாவில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவதற்கு முன்னரே புனித ஆல்பர்ட் பகுதியில் விளம்பரம் மற்றும் விற்பனை செய்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் இம்மாதம் 17 ஆம் திகதி அது சட்டபூர்வமாக்கப்பட்டது.

இதற்க்கு முன்னரே பல இடங்களில் கஞ்சா விற்பனை இடம்பெற்று வந்ததுடன் அதற்கான விளம்பரப்படுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் திகதி றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸாரின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 29 வயதுடைய பெண் உரிமையாளர், 62 மற்றும் 48 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்களுக்கு எதிராக இரு வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதுடன் குறித்த மூவரையும், அடுத்த மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.