அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு!

ஒன்ராறியோ மாகாணத்தில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு மாற்றம் இருக்காது என்று ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.

கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் வகையிலான திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியிருந்தது.

மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்களாக இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை, மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரித்த லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஆண்டு அந்த தொகை 15 டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அறிவித்திருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த அந்த திட்டத்தினை மீட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத் தொகையில் மாற்றம் இருக்காது என்று நேற்று அறிவித்துள்ளது.

அதன்படி ஒன்ராறியோ மாகாணத்தில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை 2020ஆம் ஆண்டு வரையில் 14 டொலர்களிலேயே வைத்திருக்கப் போவதாக ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முதல்வர் டக் ஃபோர்ட்டின் இந்த அறிவிப்புக்கு வர்த்தக நிறுவன தலைமைகளிடம் இருந்து வரவேற்பு வெளியிடப்பட்டுள்ள போதிலும், தொழிற்சங்கங்களும் வறுமைக்கு எதிரான வழக்கறிஞர் அமைப்பும் இதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.