சவுதி ஊடகவியலாளர் காணாமற்போன விவகாரம் – கனடா கண்டனம்!

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி மாயமான விவகாரம் குறித்து கனடா தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட், ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி காணாமற்போன சம்பவம் எழுப்பும் கேள்விகள் குறித்து தாம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுடன் தனிப்படட சில முரண்பாடுகள் உள்ள போதிலும், இவவாறான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதை கனடா ஒருபோதும் ஆதரிக்காது என்று கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

வொஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் சவுதி அரேபிய ஊடகவியலாளராக பணியாற்றி வந்த ஜமால் கஷோக்கி, அந்நாட்டு மன்னர் சல்மானின் ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் அதன் பின்னர் மாயமானார்.

இந்நிலையில் அந்த ஊடகவியலாளரை சவுதி அரேபிய தூதரக அதிகாரிகள் 15 பேர் சேர்ந்து சித்ரவதை செய்து கொன்றதாக துருக்கி அரசு ஆதரவு பத்திரிக்கையான யானி சாபக் தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோவை ஜனாதிபதி ட்ரம்ப் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், அந்நாட்டு மன்னர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.