புதிய உடன்படிக்கையில் அமெரிக்கா நன்மை பெற்றது, கனடா காயப்பட்டுள்ளது – ஸ்ரிஃவன் ஹாப்பர்

புதிய அமெரிக்க – கனேடிய உடன்படிக்கையின் மூலமாக அமெரிக்கா சிறந்த அனுகூலங்களை பெற்றுள்ளதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்ரிஃவன் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.


இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நியூயோக்கில் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார். இருந்த போதும், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக கனடா ஒருவிதத்தில் காயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்த ஒப்பந்தம் மூலமாக அமெரிக்கா நன்மையான பக்கத்தை பெற்றுள்ளதை கனேடியர்கள் நன்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். அமெரிக்கா சில நன்மைகளை பெற்றுள்ள அதேவேளை எதனையும் இழக்கவில்லை என்பது தௌிவாக தெரிகின்றது” என்று அவர் தனது செவ்வியில் சுட்டிக்காட்டினார்.

கனடா சில விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால் உண்மையில் வெற்றிபெறவில்லை என்று கனடா – அமெரிக்கா உடன்படிக்கை குறித்த தனது வருத்தத்தை முன்னாள் பிரதமர் வௌியிட்டார்.

அதேவேளை, கனடா ஒரு சிறந்த ஏற்றுமதி பங்காளர் ஆனால் முறையான அனுகூலம் இவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த கருத்துக்களை அவர் தெரிவித்தார்.