அமெரிக்கா வெறித்தனமான தலைமையால் வழிநடத்தப்படுகிறது: கனேடிய முன்னாள் பிரதமர்

அமெரிக்கா ஒரு வெறித்தனமான தலைமையால் வழிநடத்தப்பட்டு வருவதாகவும், நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அமெரிக்க பேரரசின் முடிவை குறிப்பதாகவும், கனேடிய முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் விமர்சித்துள்ளார்.

தனது பத்து வருட கால பிரதமர் பதவி குறித்து அவர் வெளியிடவுள்ள புத்தகம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் பிரதமர் வழங்கிய செவ்வியொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”உலகளாவிய ரீதியில் சுபீட்சத்தை ஏற்படுத்தி ஒரு பாதுகாப்பாளராக செயற்பட்டுவந்த அமெரிக்கா, தற்போது முதல் முறையாக ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் சர்வதேச ஒழுங்கை மீறி வருகிறது.

அதுமாத்திரமின்றி, ஈரான் அணுவாயுத ஒப்பந்தம் உள்ளிட்;ட பிற சர்வதேச உடன்படிக்கைகளிலிருந்து தம்மை முறித்துக் கொண்டுள்ள அமெரிக்கா, தமது பாரம்பரிய நட்பு நாடுகளுக்கு மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா தனிமையாக்கப்பட விரும்பினால் அது சிறந்ததே. ஆனால், அதனால் அமெரிக்கா குறைவான செல்வாக்கையே கொண்டிருக்கும்” என எச்சரித்தார்.