பிரம்டனில் உணவு உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து!

பிரம்டனில் Tomken வீதி மற்றும் Wilkinson வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் இருந்த உணவு உற்பத்தி நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.30 அளவில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அங்கே கரும்புகை மூட்டத்துடன் பலத்த தீ எரிந்தவாறு காணப்பட்டதாகவும், ஒரு இடத்தில் என்றில்லாமல் பல இடங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்த வேண்டியிருந்ததாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தீவிரமாக செயற்படட தீயணைப்பு படையினர் நள்ளிரவு அளவில் தீப்பரவலின் பெரும்பாலான பாகங்களை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்த போதிலும், சில இடங்களில் ஏற்பட்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தனர்.

இந்த தீப்பரவல் ஆரம்பித்த வேளையில், தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை எனவும், எனவே இதன்போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவலால் ஏற்பட்ட புகைமூட்டம் நெடுஞ்சாலை 410 இன் ஊடான போக்குவரத்துகளிலும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சத்தினால், ஒன்ராறியோ மாகாண பொலிஸாருக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.