ஜனாதிபதி ட்ரம்புடனான சந்திப்பிற்கான எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை – பிரதமர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இச்சந்திப்பிற்கு கனேடிய பிரதமர் அழைப்பு விடுத்திருந்ததாகவும், அமெரிக்க ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே குறித்த சந்திப்பிற்கான எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை என இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம் விடுத்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ”கனடாவின் தீர்வைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.

அது மாத்திரமின்றி கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தை முறை குறித்து நாம் அதிருப்தி கொண்டுள்ளோம். நாம் அவர்களது பிரதிநிதித்துவத்தை விரும்பவில்லை.

கனடா எனக்கு பிடித்தமான நாடு. அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் காணப்படுகின்றனர். ஆனால், கனடா எம்மை மிக மோசமாக நடத்துகின்றது” எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.