ஆங் சான் சூகியின் கௌரவ குடியுரிமையை கனடா மீளப் பெறுகிறது!

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகியின் குடியுரிமையை ரத்து செய்வதற்கு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக வாக்களித்துள்ளனர்.


ரோஹிங்கியா சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கட்டுப்படுத்த மியான்மர் தலைவர் தவறிய நிலையிலேயே கனடா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

ஆங் சாங் சூகி தொடர்ந்தும் கௌரவ குடியுரிமைக்குத் தகுதியானவராக உள்ளாரா என்று கேள்வி எழுப்பிய கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சூகிக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ குடியுரிமையை ரத்து செய்வதால் பௌத்த கோட்பாட்டை பின்பற்றுபவர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மாரில், ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

பிரதமரின் கருத்தை தொடர்ந்து குறித்த விடயம் நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதற்கு அமைய இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியின் கீழிருந்த, மியான்மாரில் மக்களாட்சியை நிறுவுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக ஆங் சான் சூகிக்கு கடந்த 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு ஆங் சான் சூகிக்கு கனடா கௌரவ குடியுரிமை வழங்கியது. கனடாவால் கௌரவிக்கப்பட்ட ஆறு பேரில் சூகியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹிங்கியா இன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைகள் தொடர்பாக மியான்மார் இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மியான்மாரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களால் இதுவரை சுமார் ஏழு லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மியான்மாரை விட்டு வெளியேறியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.