கனேடிய பிரதமருடனான சந்திப்பை நிராகரித்தார் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்கான, கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா. சபையின் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இச்சந்திப்பிற்கு கனேடிய பிரதமர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

வட அமெரிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை மோசமான நிலையில் காணப்படுகின்ற நிலையிலேயே இப்பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நேற்று (புதன்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ட்ரம்ப், ”கனடாவின் தீர்வைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.

அது மாத்திரமின்றி கனடாவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் பேச்சுவார்த்தை முறை குறித்து நாம் அதிருப்தி கொண்டுள்ளோம். நாம் அவர்களது பிரதிநிதித்துவத்தை விரும்பவில்லை.

கனடா எனக்கு பிடித்தமான நாடு. அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் காணப்படுகின்றனர். ஆனால், கனடா எம்மை மிக மோசமாக நடத்துகின்றது” எனத் தெரிவித்தார்.