நஃப்டா வர்த்தக உடன்பாடு கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

வடஅமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில் குறித்த உடன்பாடு தொடர்பான அடுத்த பேச்சுக்கான கால எல்லையினைத் தவறவிட்டுவிட வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் ஏற்கனவே பல கால எல்லைகள் தவறவிடப்பட்டுள்ள நிலையில் பேச்சுக்கள் இன்னமும் தொடர்வது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் ஹெவின் ஹசெட் கருத்துத் வெளியிடுகையில்,

கனடாவுடனான இந்த பேச்சுக்கள் எதற்காக இன்னமும் முடிவுக்கு வரவிலலை என்பது குறித்து டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் குழப்படைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும் மெக்சிககோவுக்கும் இடையே சிறந்ததொரு இணக்கப்பாடு ஏற்பட்டுளு்ள நிலையில், அதனை ஏன் கனடாவுடன் செய்து கொள்ள முடியாது போயுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எது எவ்வாறு இருந்த போதிலும், இந்தப் பேச்சுவார்த்தைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கால எல்லை நெருங்கிவிட்டது எனவும், இதனை இன்னமும் நீண்ட காலத்திற்கு நீட்டித்துச் செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே குறித்த இந்த கால எல்லைக்குள் கனடாவுடனான இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால், மெக்சிக்கோவுடன் செய்து கொள்ளப்பட் ஒப்பந்தத்தை மட்டும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விடயத்திற்கு முடிவு காண்பதற்கான அடுத்த கால எல்லை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி என்ற வகையில், அதற்கு முன்னதாக கடந்த வாரத்தில் இடம்பெற்ற பேச்சுக்களில் எந்தவித இணக்கப்பாடுகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இதற்கு பின்னரும் இரு தரப்பு முக்கியஸ்தர்களும் பேச்சக்களில் ஈடுபடுவார்களா என்பது குறித்தோ, அதற்குப் பின்னரும் புதிய கால எல்லைகள் தீர்மானிக்கப்படுமா என்பது குறித்தோ இதுவரை தகவல்கள் எவையும் வெளியிடப்படாத நிலையிலேயே, அமெரிக்கத் தரப்பு இவ்வாறான எச்சரிக்கைகளை விடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.