ஸ்கார்பரோ துப்பாக்கிச் சூடு: 19 வயது இளைஞன் உயிரிழப்பு!

ஸ்கார்பரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சுமார் 19 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரிம்லி வீதி மற்றும் ஷெப்பேர்ட் அவனியூ பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது, அங்கே அந்த இளைஞன் சுயநினைவற்று காணப்பட்டதாகவும், பின்னர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸார் மேற்கொண்டுவருகின்ற போதிலும், சந்தேகநபர்கள் குறித்த விபரங்கள் எவையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் இடம்பெற்ற பகுதியூடான போக்குவரத்தை தடைசெய்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.