கனேடிய பிரதமரின் இந்திய விஜயம்: செலவு வெளிப்படுத்தப்பட்ட தொகையைவிட அதிகம்

கடந்த பெப்ரவரி மாதம் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் இந்திய விஜயத்திற்கு, கணக்கறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தொகையைவிட அதிக செலவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு ஒன்பது நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த கனேடிய ஜனாதிபதி, 1.5 மில்லியன் டொலர் செலவிட்டதாக ஜுன் மாதம் வெளியிடப்பட்ட கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியாகிய (திங்கட்கிழமை) கனேடிய வரிவிதிப்பாளர்களின் அறிக்கைக்கு இணங்க, ட்ரூட்டோவின் இந்திய விஜயத்திற்கான செலவு 1.66 மில்லியன் டொலர் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

“குறித்த செலவீனத்தின் அளவு மேலும் அதிகரிக்கலாம். ஏனெனில், அமைச்சர்கள் மேற்கொள்ளும் சுற்றுப் பயணங்களின் செலவுகளுக்கான பற்றுச் சீட்டுக்கள் வந்து சேர்ந்து கணக்கெடுப்பதற்கு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் கூட ஆகலாம் எனவே பிரதமரின் இந்தியப் பயணத்திற்கான செலவுத் தொகை மேலும் அதிகரிக்கக் கூடும்” என கனேடிய வெளிவிவகார அமைச்சரின் பேச்சாளர் எடம் ஒஸ்டன் தெரிவித்துள்ளார்.