நஃப்டா பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி!- கிறிஸ்டியா மீண்டும் அமெரிக்கா விஜயம்

அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலண்ட் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.


அதன்படி எதிர்வரும் வாரம் முதல் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான றொபர்ட் லைட்தைசருடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாக கனேடிய வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வொஷிங்டன் விஜயம் தொடர்பாக ஒட்டாவாவில் நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த கிறிஸ்டியா ப்ரீலண்ட், ”அமெரிக்கா பிரதிநிதியுடன் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன். அந்தவகையில், அடுத்த வாரம் வொஷிங்டனில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளோம்.

இதற்கான தொழில்நுட்ப மட்டத்திலான நடவடிக்கைகளை அமெரிக்க தலைநகரிலுள்ள எமது பேச்சுவார்த்தையாளர்கள் எதிர்வரும் வியாழன், வெள்ளிக் கிழமைகளில் முன்னெடுப்பர்” எனத் தெரிவித்தார்.

1.2 த்ரில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இருதரப்பு வர்த்தகத்தினை மெக்சிகோவுடன் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நஃப்டா ஒப்பந்தமானது கடந்த 25 வருடங்களாக அமெரிக்காவினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததோடு தற்போது அதன் மூன்று அங்கத்துவ நாடுகளில் ஒன்றினை மட்டும் தவிர்த்து இரு தரப்பு ஒப்பந்தத்தினை மேற்கொள்ள அமெரிக்கா எண்ணி வருகிறது.

இந்நிலையில், நஃப்டாவில் கனடாவின் அங்கத்துவத்தை நீடிக்கும் முயற்சியில் ஃபிரீலான்ட் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.