ரொறன்ரோ பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு: பெண் உட்பட ஏழு பேர் கைது!

ரொறன்ரோ பெரும்பாகத்தில் நேற்று (சனிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் ஒரு பெண், 6 ஆண்கள் என ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விட்பி மற்றும் ஸ்காபரோ பகுதிகளில் நேற்று காலையில் ஒன்றுக்கு மேற்பட்ட சுற்றிவழைப்புத் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதனை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

டூர்ஹம் பிராந்திய பொலிஸார் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது 3 கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் என்று சந்தேகிக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கடந்த யூலை மாதத்தில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஸ்காபரோவின் Misthollow Square, விட்பி மற்றும் மிட்லான்ட் அவனியூவில் Hickory Street North பகுதி ஆகியவற்றில் நேற்று காலையில் தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஏறக்குறைய 14 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான போதைப் பொருட்கள் மற்றும் 15 ஆயிரம் டொலர்கள் ரொக்கப்பணம் என்பனவும் விசாரணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 3 துப்பர்ககிககள் கைப்பற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 22 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.