மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிராக கனடாவில் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படவுள்ள மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கனடாவின் ரோறன்ரோ மாகாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி எனக்கூறும் அரசாங்கம் திட்டமிட்ட வகையில் முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கிலேயே, மாகாவலி அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகள் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், அரசாங்கம் உடனடியாக குறித்த திட்டத்தினை கைவிட வேண்டும் எனவும், இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது ‘தமிழனே விழித்துரு மகாவலியை எதிர்த்திடு’ போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டங்கள் தொடர்பிலான ஒளிப்படங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.