ரொறொன்ரோவை விட்டு வெளியேற திட்டமிடும் மக்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ரொறொன்ரோ மக்களில் பெரும்பாலானோர் ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேற திட்டமிட்டு வருவதாக, தெரியவந்துள்ளது.

அண்மையில் மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலமே இந்த முடிவு தெரிய வந்துள்ளது. ரொறொன்ரோவில் வீட்டு விலை மற்றும் வாடகை என்பன அதிகரித்துள்ளமையினாலேயே அவர் இதற்கு முனைவதாக அந்த கருத்து கணிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பானது ரொறொன்ரோ பெரும்பாகம் முழுவதிலும் உள்ள 831 பேரிடம் நடாத்தப்பட்டுள்ள நிலையில், ரொறொன்ரோபெரும்பாகத்தை விட்டுவெளியேறுவது தொடர்பில் மிகவும் தீவிரமாக சிந்தித்து வருவதாக ரொறொன்ரோவில் வீடுகளை அல்லது அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்போரில் 47 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த இந்த ஆய்வில் ரொறொன்ரோவை விட்டு வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளோரில் 58 சதவீதமானோர் 18 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டோர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 52 சதவீதம் பேர் தற்போது அதிகரித்துள்ள வீட்டு விலைகள் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் சிறிதளவேனும் வீழ்ச்சியைக் காணும் எனவும் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறே இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 75 சதவீதம் பேர் ரொறொன்ரோவில் வதிவிட செலவீனம் அதிகரித்துச் செல்வதாகவும், இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட்டு, அனைவரும் தங்கும் இடங்களை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதிகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துள்ளனர்.