கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

நஃப்டா எனப்படும் வட அமெரிக்க வர்த்தக உடன்பாடு தொடர்பில் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இந்த வாரப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள், தீர்மானங்கள் எவையும் எட்டப்படாத நிலையில் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த விவகாரத்தில் ஒரு விரைந்த தீர்மானத்தை எட்டும் நோக்கில், அடுத்த வாரமும் இரண்டு நாட்டு பிரதானிகளும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த விவகாரம் தொடர்பில் நேற்று முடிவு காணப்படும் என்று இரண்டு நாடுகளின் தலைவர்களும் தாமாகவே ஒரு காலக்கெடுவினை கூறிவந்த நிலையில், இணக்கப்பாட்டினை எட்டும் சூழ்நிலை நேற்றைய பேச்சுவார்த்தைகளின் போதும் ஏற்படவிலலை என்று கூறப்படுகிறது.

எனினும் இரு தரப்பு அதிகாரிகளும் மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்கா மெக்சிக்கோவுடனான தனது ஒப்பந்தத்தில் எதிர்வரும் 90 நாட்களினுள் கைச்சாத்திடவுள்ளதாகவும், கனடாவும் விரும்பினால் அந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்காளியாக ஆகலாம் என்றும், கனடாவுடனான பேச்சுக்களும் ஆக்ககரமாகவே அமைந்தன என்றும் அமெரிக்க பேச்சுவார்த்தைக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.