கனேடிய போர் வீரர்கள் பற்றிய தரவுகள் சேகரிப்பு!

கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்காக போரிட்ட 150,000 போர்வீரர்களின் பெயர்கள் விபரங்கள், இரண்டு தசாப்த கால கடும் முயற்சியின்  பயனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கனடா மற்றும் அமெரிக்க நாடுகளுக்காக போரிட்ட வரலாற்று முக்கியத்தவம் வாய்ந்த வீரர்களின் பெயர் விபரம், ஒளிப்படம் கொண்ட மிகப் பாரிய தரவு சேகரிக்கும் செயன்முறையினை  நீண்ட காலமாக மேற்கொண்டுவந்த வரலாற்று அறிஞர் யான் கெஸ்டல்நோட் அண்மையில் வெற்றிகண்டுள்ளார்.

பிரான்ஸிலிருந்து 13 வருடங்களுக்கு முன்னர் புகலிடம்கோரி கனடாவில் குடியேறியவரே அறிஞர் யான் கெஸ்டல்நோட் ஆவார். இவர் இருபது வருடங்களாக தரவு சேகரித்து வந்துள்ளார். குறித்த ஆய்வின் வெற்றிக்கு கியூபெக் மக்களின் பாரிய பங்களிப்பே காரணமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தரவு விபரங்களில் உள்ளடங்கும் வீரர்களில் 18,830 போர்வீரர்கள் கனடாவை பிறப்பிடமாகக் கொண்டவர்களாவர்.

தற்போது நாங்கள் அவர்களை மறந்துவிட்டோம். அவர்களின் வீர செயல்கள், தியாகங்கள் என்பவற்றை நாம் நினைவுகூர வேண்டுமென்று குறித்த வரலாற்றறிஞர் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று ஆதாரங்களாக விளங்கும் இந்த ஒளிப்படங்களும் ஆவணங்களும் வெறும் கடதாசிகளல்ல, மாறாக அவைகள் கதை சொல்லிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நாட்டுக்காக உயிர்நீத்தவர்களை நினைத்துப் பெருமைப்பட வேண்டும் என்றும் அவர்களையும் பெருமைப்படுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரிய தரவு சேகரிப்பினை மேற்கொண்டு வெற்றி பெற்ற வரலாற்றறிஞர் யான் கெஸ்டல் நோட்டிற்கு அரசாங்கம் பதக்கம் அணிவித்து கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.