ஒன்ராறியோ Kitchener பகுதியில் உள்ள வீட்டில் வெடிப்பு சம்பவம்: பெண் ஒருவர் உயிரிழப்பு!

ஒன்ராறியோ Kitchener பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sprucedale Crescent பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே 8:10 மணியளவில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு சம்பவமானது அருகில் உள்ள குடியிருப்புகளையும் பாதித்துள்ள நிலையில், அருகே உள்ள 10 ற்கும் அதிகமான வீடுகளில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் தற்போது வரை குறித்த பகுதியில் இருந்த 16 வீடுகளைச் சேர்ந்தவர்களை தீயணைப்பு படையினர் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாகவும், வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானோர், மூன்று நாட்களில் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் வெடிப்பு இடம்பெற்ற பகுதிக்கு அருகே உள்ள இரண்டு வீடுகள் வெடிப்பின் காரணமாக பலத்த சேதங்களைச் சந்தித்துள்ள நிலையில், அதில் குடியமர வேண்டாம் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவ இடத்தில் உள்ள மீட்புக்குழுவினர் மற்றும் செஞசிலுவைச் சங்கத்தினர், வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தோருக்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.