மாநகரசபை உறுப்பினர்கள் குறைப்பை ரொரன்ரோ மக்கள் ஆதரிக்கின்றனர்?

ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில் நடாத்தப்பட்ட கருத்துக் கணிப்பொன்றின் முடிவில், குறித்த நிலைப்பாட்டினை ரொரன்ரோ மக்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் விரும்புவதாக தெரியவந்துள்ளது.


டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம் ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஒன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளது.

இதனை அடுத்து இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் ஒன்ராறியோ சொத்துச் சந்தையாளர்கள் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் முடிவில், ரொரன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 25 ஆக குறைக்க வேண்டும் என்று ரொரன்ரோ மக்களில் ஏறக்குறைய அரைப்பங்கினர் விரும்புவதாக தெரிய வந்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களுள் ரொரன்ரோ மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 45இலிருந்து 25 ஆக குறைக்க வேண்டும் என்ற கருத்தினை 48 சதவீதம் பேர் முன்வைத்துள்ளனர்.

அதேவேளை இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டோரில் 35 சதவீதம் பேர், இந்த ஆட்குறைப்பினை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளதுடன், மாநகரசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் மாநகர நிர்வாகம் அதிக வினைத்திறனுடன் இயங்க முடியும் என்ற கருத்தினையும் அவர்கள் நிராகரித்துள்ளனர்.

இதனிடையே ரொரன்ரோ மாநகரசபை தேர்தல் அண்மிக்கும் நிலையில் இவ்வாறான ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சனநாயகத்திற்கு விரோதமான செயல் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ புதிய சனநாயக கட்சியின் தலைவர் ஆன்ட்ரியா ஹோர்வத், அரசியல் ஆதாயத்தினை பெற்றுக் கொள்வதற்காக டக் ஃபோர்ட் இந்த சட்டமூல நிறைவேற்றத்தினை பயன்படுத்திக் கொண்டுள்ளதாகவும், பெரும்பான்மை அரசினை அமைத்துவிட்ட மமதையில் பழமைவாதக் கட்சி தலைகால் புரியாது ஆடிக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறியும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.