சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றியது ஒன்ராறியோ அரசாங்கம்!

ஒன்ராறியோ அரசாங்கம் ரொறன்ரோ மாநகர சபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 47 இல் இருந்து 25 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.


இந்த சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் கடந்த ஒரு மாதகாலமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று (செவ்வாய்கிழமை) நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம் திகதி ரொறன்ரோ நகரசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோ அரசின் இந்த செயற்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரொறன்ரோ மாநகரசபையின் உறுப்பினர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் இந்த சட்ட மூலத்தை முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம், கடந்த யூலை மாதத்தில் திடீரென்று அறிவித்தது.

குறித்த சட்டமூலத்திற்கு, மூத்த அரசியல் வாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் ஒன்ராறியோ அரசாங்கம் குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.