மனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா ஒருபோதும் தயங்காது! – ட்ரூடோ

மனித உரிமைகளை மீறும் உலக நாடுகளின் செயற்பாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு கனடா ஒருபோதும் பின்வாங்காதென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சவூதிய அரேபியாவின் மனித உரிமை விடயத்தில் கனடாவுடனான முரண்பாட்டு நிலையை சுட்டிக்காட்டிய கனேடிய பிரதமர், உலக நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான அறிக்கைகளை அவதானித்த வண்ணமுள்ளதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அதனை சுட்டிக்காட்ட தயங்கமாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

நேற்று (புதன்கிழமை)  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பிரதமர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கனடாவானது மனித உரிமைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் நாடென்பது அனைவரும் அறிந்ததாகும். கனடா நாட்டு மக்கள் மட்டுமன்றி உலக நாடுகளும் அதனையே விரும்புகின்றது. மனித உரிமை விவகாரத்தில் உலக நாடுகளின் தலைமை நாடாக விளங்கும் கனடாவானது அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணவே விரும்புகின்றது. எனினும் மனித உரிமைகளை மீறுமிடத்து குறித்த நாட்டிற்கு அழுத்தம் கொடுக்குமென ட்ரூடோ மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கனடாவின் வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃப்ரீலான்ட், சவூதிய அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து நேற்று முன்தினம் நீண்டநேர பேச்சுவார்த்தையொன்றை நடத்தியுள்ளார். எனினும் அது தொடர்பான தகவல்கள் எதுவுதும் வெளியிடப்படவில்லையென்றும் கனேடிய பிரதமர் தெரிவித்தார்.

சவூதிய அரேபியா, அந்நாட்டு சமூக செயற்பாட்டாளர்களை சிறையிலிட்டமை தொடர்பில் கனடா எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, கனடாவுடனான தொடர்புகள் அனைத்தையும் சவூதி இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.