ரொரன்ரோவுக்கு இன்றும் நாளையும் வெப்ப எச்சரிக்கை

ரொரன்ரோ உள்ளிட்ட பெரும்பாலான ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் இன்றும் நாளையும் அதிக அளவிலான வெப்பநிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அந்த வெப்ப எச்சரிககையில், ஞாயிற்றுக்கிழமை ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களை நோக்கி ஈரப்பதனுடன் வெப்பமும் கூடிய காற்று நகரும் எனவும், நாளை திங்கட்கிழமை வரையில் அது தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களிலும் ஈரப்பதனின் அளவு 40 என்ற அளவிலும், வெப்பநிலை 31 பாகை செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்றும், எதிர்வரும் இரண்டு நாட்களிலும் இரவு நேர வெப்பநிலை 20 பாகையினை விடவும் குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை மாலை வரையில் அதிக அளவில் காணப்படக்கூடிய வெப்பநிலை, செவ்வாய்க்கிழமை 26 பாகையாக வீழ்ச்சியடையும் என்றும், அதன்போது மழைப்பொழிவும் ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அதிகரித்த வெப்பம் நிலவும் வேளைகளில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், வெளியே அதிக நேரத்தினை செலவிடுவோர் மற்றும் குழந்தைகள், சிறுவர்கள், கர்பிணித் தாய்மார், வயதானவர்கள் போன்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.