ரொறன்ரோ நகரத்திற்கு 11 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

தஞ்சக் கோரிக்கையாளர்களினால் ஏற்பட்ட செலவுகளால் திண்டாடும் ரொறன்ரோ நகரத்திற்கு, 11 மில்லியன் டொலர்கள் வழங்க மத்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

இந்த நிதியின் மூலம் தஞ்சக் கோரிக்கையாளர்களின் அவரச தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள முடியுமென, நம்பப்படுகின்றது.

இதேவேளை, தஞ்சம் புகுந்தோர்க்கு தற்காலிக வீடு வழங்குவதற்கான நிதி உதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் என, மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு அமைச்சர் பில் பிளயர், தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம், ஒழுங்கற்ற முறையில் கனடா- அமெரிக்கா எல்லையை கடந்த அகதி கோரிக்கையாளர்களிற்கான செலவின் ஒரு பகுதியாக, 50 மில்லியன் டொலர்களை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

இதில் கியுபெக்கிற்கு மொத்தமாக 36 மில்லியன் டொலர்கள், ஒன்ராறியோவிற்கு 11 மில்லியன் டொலர்கள் மற்றும் மனிரோபாவிற்கு 3 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.