தற்கொலைக்கு முயன்ற இளைஞனை ரயில்வே ஊழியர் காப்பாற்றினார்

கனடாவில் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞன் ஒருவரை காப்பாற்றியுள்ள ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

கனடாவிலுள்ள Dundas ரயில்வே நிலையத்தில்,  J.P Attard என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், தண்டவாளத்தில் 20 வயதுள்ள இளைஞன் ஒருவர் சோகமாக அமர்ந்திருப்பதை பார்த்ததும் Attard, உடனடியாக மின் இணைப்பை துண்டிக்குமாறு சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, அந்த இளைஞனை நோக்கி சென்று அவரிடம் பரிவுடன் கதைத்து காப்பாற்றினார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்துரைத்த Attard, “நான் அந்த இளைஞனின் அருகில் சென்றதும் இன்றைய நாள் உனக்கு கெட்டதா என கேட்டேன். ஆம் என்னை காயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் என அந்த இளைஞன் பதிலளித்தான்.

இதனைத் தொடர்ந்து அவனை சமாதானப்படுத்த முயன்ற நான், அவனை கட்டித் தழுவியவாறே உன்னுடைய எதிர்மறை நிகழ்வுகளை நேர்மறையாக பார் என அறிவுரை வழங்க, அதனை ஏற்றுக்கொண்ட இளைஞனும், நான் உறுதியானவன் என சத்தமாக பதிலளித்தான்” எனக் குறிப்பிட்டார்.

இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் பலரும் உற்சாகத்துடன் கைதட்டி, Attard இற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

குறித்த ரயில்வே ஊழியருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.