ஒன்ராறியோவில் காட்டுத் தீ: தொடர்ந்தும் மக்கள் வெளியேற்றம்!

ஒன்ராறியோவில் காட்டுத் தீயின் புகைமூட்டம் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக குறிப்பிட்ட இடங்களில் இருந்து ஏற்கனவே மக்கள் வெளியேறியுள்ளதுடன், பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த காட்டுத் தீயின் புகைமூட்டம் குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகர தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் வீடுகளில் வசிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர் என்றும், குறிப்பாக Parry Sound பகுதியில் காட்டுத்தீ தீவிரமாக பரவிவரும் நிலையில், அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகளை பொதிசெய்துகொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த புகையினால் கண் எரிச்சல், சுவாசப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகமகொடுக்க நேர்ந்துள்ளதால் வீடுகளில் வசிக்க முடியா நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியேறிவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்ராறியோவின் வடகிழக்கே Parry Sound பிராந்தியத்தில் யூலை மாதம் 18ஆம் திகதி பரவத் தொடங்கிய காட்டுத் தீ 100 சதுரக் கிலோமீடடருக்கும் அதிகமான வனப்பகுதியை அழித்துவிட்டதாக ஒன்ராறியோ இயற்கைவளங்கள் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ட்ரான்ஸ் கனடா நெடுஞ்சாலையில் இருந்து ஐந்து கிலோமீடடர் தொலைவு வரையில் தற்போது காட்டுத்தீ நெருங்கி வந்து விட்டதாகவும், எதிர்வரும் நாட்களில் மேலும் வேகமாக பரவும் ஆபத்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் 500இற்கும் அதிகமான தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மெக்சிக்கோவில் இருந்து உதவிக்கு வந்த 200க்கும் அதிகமான தீயணைப்பு படையினரும் களத்தில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.