புரூஸ் மக் ஆதரின் தொடர்கொலை : மேலும் மனித எச்சங்கள் மீட்பு

தொடர் கொலையாளி புரூஸ் மக் ஆதரினால் கொலை செய்யப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரது வீட்டுக்கு அருகே இருந்து நேற்று இரண்டாவது நாளாகவும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

பல தொடர் கொலைகளை புரூஸ் மக் ஆதர் என்ற நபர் செய்துள்ள நிலையில், அவரிடம் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் புரூஸ் மக் ஆதரினால் கொலை செய்யப்பட்டவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரது வீட்டுக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையின் போது கடந்த புதன்கிழமையும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதனை அடுத்து மறுநாள் வியாழக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் மனித உடற்பாகங்கள் மீட்கப்பட்டதாக ரொரன்ரோ காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து குறித்த அந்த பகுதியினை அகழும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அகழ்வு நடவடிக்கைகள் இன்னமும் தொடரும் என்றே நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இந்த அகழ்வு நடவடிக்கைகள் இந்த வார இறுதி விடுமுறைக்காக இடைநிறுத்தப்பட்டு பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீள ஆரம்பமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் மீட்கப்பட்ட உடற்பாகங்கள் மீதான உற்கூற்று பரிசோதனைகள் திங்கட்கிழமை இடம்பெறும் என்றும் விபரம் அவர் வெளியிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலத்தில் விரல் அடையாளம் காணப்படுமாக இருந்தால், அதனை வைத்து சடலத்துக்குரியவரை அடையாளம் காண முயற்சிக்கப்படும் எனவும், இல்லாதவிடத்து மண்டை ஓடு கிடைத்தால் பற்களைக் கொண்டு அடையாளம் காண முயற்சிக்கப்படும் என்றும், அதுவும் முடியாதவிடத்து மரபணு ஒப்பீட்டு முறை மூலம் அடையாளம் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.