ஒன்ராறியோ லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவராக ஜோன் ஃபிரேய்சர் நியமனம்

ஒன்ராறியோ லிபரல் கட்சியின் இடைக்காலத் தலைவராக ஒட்டாவா தொகுதி சடடமன்ற உறுப்பினரான ஜோன் ஃபிரேய்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து ஒன்ராறியோ லிபரல் கட்சியின் தலைவராக இருந்த கதலின் வின் அந்த பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், புதிய இடைக்காலத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் ஒட்டாவா தொகுதி சடடமன்ற உறுப்பினரான ஜோன் ஃபிரேய்சரை இடைக்காலத் தலைவராக முன்மொழிந்ததை அடுத்து, கட்சி நிறைவுற்றுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தேர்தல் தொகுதி தலைவர்கள் ஆகியோரிடையே வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு ஜோன் ஃபிரேய்சர் புதிய இடைக்காலத் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த இடைக்கால தலைவரின் நியமனத்தின் முன்னராக, கடந்த 15 ஆண்டுகளாக ஒன்ராறியோவில் ஆட்சியில் இருந்த லிபரல் கட்சியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதுடன், அதில் கட்சியை மீளவும் கட்டியெழுப்புவது குறித்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விவாதங்களும் நடைபெற்றிருந்தன.

இதனைத் தொடர்ந்தே இடைக்காலத் தலைவராக ஜோன் ஃபிரேய்சர் தேர்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோன் ஃபிரேய்சர், 2013ஆம் ஆண்டில் நடாத்தப்ப்டட இடைத்தேர்தலின் மூலம் முதன்முறையாக சட்டமன்றுக்கு தெரிவாகியிருந்தார்.

அப்போதைய லிபரல் கட்சித் தலைவர் டோல்ட்டன் மக்கியுன்டி பதவி விலகியதை அடுத்து குறித்த அந்த இடைத் தேர்தல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் ஃபிரேய்சர், இதற்கு முன்னர் அமைச்சரவைப் பதவிகள் எதனையும் வகிக்கவில்லை என்ற போதிலும், சுகாதார அமைச்சர், வடபிராந்திய அபிவிருத்தி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், இயற்கைவள அமைச்சர் ஆகியோருக்கான நாடாளுமன்றச் செயலாளராக கடமையாற்றியுள்ளார்.