லிபரலுக்கு உத்தியோகபூர்வ கட்சித் தகுதியை டக் ஃபோர்ட் வழங்குவார் கதலின்வின் நம்பிக்கை

அமையவிருக்கும் ஒன்ராறியோ மாநில சட்டமன்றில் லிபரலுக்கு உத்தியோகபூர்வ கட்சித் தகுதியை டக் ஃபோர்ட் வழங்குவார் என்று ஒன்ராறியோ மாநிலத்தின் முன்னால் முதல்வர் கதலின் வின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்று முடிந்த தேர்தலில், பெருமளவான தொகுதிகளை இழந்துள்ள லிபரல் கட்சி, ஆட்சி அதிகாரத்தை மட்டுமின்றி, உத்தியோகபூர்வ கட்சித் தகுதியையும் சட்டமன்றில் இழந்துள்ளது.

இதனை அடுத்து இதுவரை கட்சித் தலைவராகவும் ஒன்ராறியோ முதல்வராகவும் பதவி வகித்துவந்த கத்தலின் வின் தனது பதவியிலிருந்து விலகியதுடன், லிபரல் கட்சி மிகவும் பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ள தற்போதைய நிலையில் கட்சியின் இடைக்காலத் தலைமைப் பதவிக்கு ஜோன் ஃபிரேய்சர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ பழமைவாதக் அரசாங்கம் லிபரல் கட்சிக்கு சட்டமன்றில் உத்தியோகபூர்வ கட்சித் தகுதியை வழங்குமா என்பது குறித்தும், ஜோன் ஃபிரேய்சருக்கான பணிகள் தொடர்பிலும் எதிர்பார்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

அவ்வாறு லிபரல் கட்சிக்கு சட்டமன்றில் உத்தியோகபூர்வ கட்சித் தகுதி கிடைக்கிறது இல்லையா என்பதனை அடிப்படையாகக் கொண்டே, ஜோன் ஃபிரேய்சருக்கான பணிகள் கடினமாக இருக்குமா இல்லையா என்பதனைக் கூறமுடியும் என்று ரொரன்ரோ பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பேராசிரியரான நெல்சன் வைஸ்மன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சடடமன்றில் உத்தியோகபூர்வ கட்சியாக பிரதிநிதித்துப்படுத்துவதற்கு குறைந்தது எட்டு ஆசனங்களை ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், லிரபல் கட்சி ஏழு ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தமக்கான உத்தியோகபூர்வ கட்சித் தகுதியை டக் ஃபோர்ட் வழங்குவார் என்று கத்தலின் வின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் வாரங்களில் இது குறித்து தனது குழுவினருடன் பேசுவதாக டக் ஃபோர்ட்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.