ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் விரைவில்: டக் ஃபோர்ட்

ஒன்ராறியோ மாநிலத்திற்கு கடந்த 7ஆம் திகதி நடாத்தப்பட்ட தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த லிபரல் கட்சியிடம் இருந்து டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் சுமூகமான ஆட்சி மாற்றத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு 3 வாரங்கள் வரையில் ஆகக்கூடும் எனவும் முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

மத்திய அரச மட்டத்தில் செயற்படுபவர்களின் உதவியுடன் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மேலும் கூறியுள்ள அவர், இதன்மூலம் பழமைவாதக் கட்சியின் பலமான அமைச்சரவையை உருவாக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதுவரை காலமும் உள்ள ஒன்ராறியோவின் நிதி நிலைமைகளை ஆராய வேண்டி இருப்பதாகவும், தற்போதய நிதி நிலையினை சரிவர தெரிந்துகொள்ள வேண்டியுள்ளதாகவும், இதற்கு ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் ஆகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இவை அனைத்தும் முடிவடைந்ததும் தம்மால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் குறித்த திட்டங்களை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இந்த ஆட்சி மாற்றம் மற்றும் புதிய அரசினையும் அதன் அமைச்சரவையையும் எதிர்வரும் 21 நாட்களுள் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் பழமைவாதக் கட்சி தொடங்கியுள்ளது.

இதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில், முன்னாள் பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெயர்ட் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஒன்ராறியோ பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோடடை நேற்று பிற்பகல் சந்தித்துள்ள ஒன்ராறியோவின் ஆளுநர், புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.