ஸ்காபரோவில் துப்பாக்கி மோதல்: ஒருவர் பலி, பொலிசார் காயம்

ஸ்காபரோவில் இடம்பெற்ற காவல்துறையினர் தொடர்புபட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியானதுடன், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Hymus வீதி மற்றும் Warden Avenue பகுதியில் நேற்று நள்ளிரவு வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த பகுதியில் ஆண் ஒருவர் துப்பாக்கியுடன் காணப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து, ரொரன்ரோ காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றதாகவும், அதன்போது அங்கே துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதன் போது காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்ததாக காவல்துறையினரால் முன்னர் கூறப்பட்டதுடன், அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கும், மற்றையவர் உள்ளூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்களில் குறித்த அந்த பொதுமகன் சிறிது நேரத்தின் பின்னர் உயிரிழந்து விடடதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இந்த சம்பவத்தில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அந்த சம்பவத்தில் காவல்துறையினர் தொடர்பு பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.