கனடிய பிரதமர் பிரான்ஸ் ஜனாதிபதியோடு சந்திப்பு

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனோடு நேற்று (புதன்கிழமை) ஒட்டாவாவில் சந்திப்பொன்றினை மேற்கொண்டார்.

குறித்த சந்திப்பின்போது ஜனாதிபதியாகிய பின்னர் மக்ரோனின் கனடாவிற்கான முதல் வருகை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதியினைக் கனடாவிற்கு வரவேற்பது தமக்கு கிடைத்த பெருமையெனவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில் மக்ரோன் எப்போதும் தமது நண்பர் எனவும் பிரான்ஸ் மற்றும் கனடாவிற்கு இடையில் என்ன நடக்கிறது என்பது குறித்து விவாதிப்பதற்கு இந்த சந்திப்பு மிகவும் உதவுவதாகவும் கூறினார்.

மேலும் G7 திட்டத்தின் பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் வெளிப்படையாக ஒன்றிணையவுள்ள நிலையில் மேலும் சில பெரிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து கனடிய பிரதமரின் கருத்துக்களுக்கும் வரவேற்புக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆதரவு மற்றும் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கியூபெக்கின் லா மல்பேயில் கனடா, அமெரிக்கா, ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் நாளை மற்றும் நாளைமறுதினம் G7 திட்டத்திற்கான பேச்சுவார்த்தையினை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.