இன்றுடன் ஒன்ராறியோவில் ஆட்சி மாற்றம்?

ஒன்ராறியோ இன்று தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று பெரிதும் எதிர்பார்கககப்படுகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சி இம்முறை வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதனை அந்தக் கட்சியின் தலைவர் கத்தலின் வின் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், இந்த தேர்தலில் பழமைவாதக் கட்சி அல்லது புதிய சனநாயக கட்சியே வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளமை வெளிப்படையாக எதிர்பார்க்கப்படுகிறது.

டக் ஃபோர்ட் தலைமையிலான ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கடசியும், ஆன்ட்ரியா ஹோர்வத் தலைமையிலான புதிய சனநாயக கட்சியும், இறுதி வேளையில் மக்கள் மத்தியில் சமமான ஆதரவினை கொண்டுள்ளதனை இறுதிநேர கருத்துக் கணிப்புகள் வெளிக்காட்டியுள்ள நிலையில், இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையிலேயே யார் அடுத்து ஆட்சி அமைப்பது என்ற போட்டி நிலவவுள்ளது.

இன்றைய இந்த தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப் பதிவுகள் கடந்த மே மாதம் 10ஆம் நாளில் இருந்து நேற்று மாலை ஆறு மணி வரையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், நேரடி வாக்குப் பதிவுகள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9 மணிவரை நடைபெறுகின்றன.

கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டுக்கான தேர்தலில் 107 தொகுதிகள் 124 தொகுதிகளாக அதிகரித்துள்ள நிலையில், வாக்காளர்கள் தங்களது தொகுதிகளை, ஒன்ராறியோ தேர்தல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இனங்கண்டு வாக்களிக்கச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் வாக்களிக்கச் செல்வோர் தமது அடையளாத்தினை நிரூபிக்கும் வகையில் சாரதி அனுமதிப்பத்திரம், வங்கி அட்டை, மின் கட்டண அல்லது தொலைபேசிக் கட்டண பற்றுச்சீட்டு உள்ளிட்டவற்றில் ஒன்றினையும், தமக்கான வாக்காளர் அட்டையினையும் தவறாது எடுத்துச் செல்லுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.